சிவகங்கை மாவட்டம் இலுப்பகுடியில் 206 நபர்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பு பணி நியமன ஆணையை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே வழங்கினார்.
‘‘நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். அதன் அடிப்படையில் மத்திய அரசு இந்தாண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மேளாக்களை ஏற்பாடு செய்து ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பு மேளாவின் அடுத்த நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 28) நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் ஆவடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் நாராயணசாமி மற்றும் சிவகங்கையில் நடைபெறும் வேலை வாய்ப்பு திருவிழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இந்த முறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுதக் காவல் படையின் பல்வேறு பிரிவுகளான மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, எல்லைக் காவல் படை, இந்தோ திபெத் காவல் படை, சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், போதைப்பொருள் தடுப்பு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் இதர துறைகளிலும் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தங்களது பணி நியமன ஆணைகளைப் பெற்றனர்.
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 2வது வேலைவாய்ப்பு திருவிழா இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழிலக பாதுகாப்புபடை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, போதைப்பொருள் தடுப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைப்பிரிவிலும் இதர துறைகளிலும் பணியாற்றிட 206 நபர்களுக்கு பணி நியமண ஆணையை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லஜே வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.