இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எங்களுக்கு ஒரு ஜீப் கூட இருந்தது இல்லை என்றும், அவர்களுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்தது இல்லை எனவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக கால் பதித்தது. இந்த சாதனையால் உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. இஸ்ரோவுக்கு உலகம் முழுவதிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த மாபெரும் சாதனைக்காக பெருமையை மோடி அரசுக்குக் கொடுக்க விரும்பாத பலர், நேருவால் துவங்கப்பட்ட ஆய்வுக்கு வெற்றி என்றும் இதற்கு காங்கிரஸ் அரசுகளுக்கு பெருமை சேரும் என்றும் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: முந்தைய காங்கிரஸ் அரசுக்கு இஸ்ரோ மீது நம்பிக்கை இருந்ததே இல்லை. அப்போதைய அரசு இஸ்ரோவுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கியதில்லை. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நிதி ஒதுக்கியதே இல்லை என்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதனை பாஜகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
மேலும் நம்பி நாராயணன் கூறும்போது, அது மட்டுமின்றி அந்த காலக்கட்டத்தில் ஜீப் கூட இல்லை. அப்போது எந்த வாகனமும் கிடையாது. எங்களுக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் கூட போதுமானதாக இருந்தது கிடையாது. ஆரம்பத்தில் இப்படியான நிலையே நீடித்தது.
எங்களுக்கான பட்ஜெட்டை கேட்க முடியாத நிலையில்தான் இருந்தோம்.. அவர்கள் கொடுப்பதை வைத்துத் தான் எங்களின் பணிகளைச் செய்ய வேண்டிய நிலை இருந்தது என்றும் கூறினார்.
தற்போதைய நிலையில் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைப் பிரதமர் மோடி தனதாக்கிக் கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனரே என்ற கேள்விக்கு பதிலளித்த நம்பி நாராயணன், ‘‘சந்திரயான்-3’’ போன்ற தேசிய திட்டத்தில் பிரதமருக்குத் தான் பெருமை செல்லும்.. வேறு யாருக்குத் தான் பெருமை செல்லும் என எதிர்பார்க்கிறீர்கள்.. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.. உங்களுக்குப் (எதிர்க்கட்சிகள்) பிரதமரைப் பிடிக்காமல் இருப்பதே இந்தக் கேள்விகளுக்கு காரணம். வேறு எதுவும் இல்லை என்றார்.