நெல்லையில் நடிகர் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தின் பாடலின் பின்னணி இசையோடு நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சமீபத்தில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் மாணவியை வீடு புகுந்து சில மாணவர்கள் அரிவாளால் பயங்கரமாக வெட்டினர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது இளைஞர்கள் வயல்களில் நாட்டு வெடிகுண்டு வீசி அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது இன்னும் மக்களை பீதியடைய செய்துள்ளது.
நெல்லையை சேர்ந்த சில இளைஞர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் இரவு நேரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் நெல்லை டவுன் அரசன் நகரை சேர்ந்த ரஞ்சித் (19) மற்றும் ஆசாத் நகரை சேர்ந்த முகமது தவுபிக் (23) ஆகியோர் சமூக வலைதளத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க செய்து அனை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் ரஞ்சித் மற்றும் முகமது தவுபிக் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் சொன்ன பதிலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை எப்படி தயார் செய்வது என்பதை கற்றுக் கொண்டோம். அதன் பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான டவுன் அன்னை வேளாங்கண்ணி நகர் அருகே உள்ள வயல் பகுதியில் வெடிக்க செய்து சோதனையில் ஈடுபட்டோம். அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தோம் என போலீசாரிடம் இளைஞர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து
இந்த சம்பவத்தில் யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் இதே நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இதேபோன்று இளைஞர்கள் சிலர் யூடியுப் சமூக வலைதளத்தை பார்த்து பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்து சுவற்றில் வீசி வெடிக்க செய்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
தொடர்ந்து நெல்லை மாவட்டங்களில் அடுத்தடுத்த குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். திமுக ஆட்சியில் இன்னும் மக்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.