செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தது. இதனால் தொடரின் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, நாடாளுமன்றம் முடங்கியது.
இந்த நிலையில் திடீர் அறிவிப்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை கூட்டப்படுகிறது. அமிர்த காலத்தை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு முடிந்த பின்னர் இந்தக் கூட்டத் தொடருக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தக் கூட்டத் தொடரில் எதாவது முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.