ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் மாவட்டத்தில் பெண் ஒருவரை நிர்வாண கோலத்தில் ஊர்வலம் அழைத்து சென்ற கொடுமை அரங்கேறியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், பிரதாப்கார் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், மனைவியை கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் கொடூர நிகழ்வாக அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வை அந்த கிராமத்தை சேர்ந்த எவரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர் போலீசார் அந்த கும்பலம் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா, காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரிசையில் மாநிலம் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவை யாருடனும் பகிர வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோளாகவும் சிந்தியா கேட்டு கொண்டார். சதீஷ் பூனியா, கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும், இதனை கடுமையாக சாடியுள்ளனர். இதுபற்றி ஷெகாவத், மகளிர் பாதுகாப்பு பற்றி மாநில முதல்வர் கெலாட் உயர்வாக பேசி வருகிறார். ஆனால், பெண்களுக்கு எதிரான மனிதநேயமற்ற தன்மை அனைத்தும் கடந்து விட்டன. கெலாட்டை எப்போது பதவி விலகும்படி ராகுல் காந்தி கூறுவார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் பெண்களுக்கு நாடு முழுவதும் கூக்குரல் எழுத்திய ” புள்ளி வைத்த இந்தியா ” கூட்டணிக் கட்சிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த அவமரியாதையை பற்றி சின்ன சத்தம் கூட எழுப்பாதது ஏன் என்கின்றனர் மகளிர் பாதுகாப்பு அமைப்பினர்!