பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ பாத யாத்திரையை பொதுமக்களிடமிருந்து திசைதிருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தேசியத் தலைமை அலுவலகத்தில், அண்ணாமலையின் ‘என் மண் – என் மக்கள்’ யாத்திரை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி மற்றும் மாநில இணைப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ‘தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார். 2ம் கட்டத்தில் உள்ள அவரது என் மண், என் மக்கள்’ யாத்திரை 55 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் 11 மக்களவைத் தொகுதிகளையும் அடைந்துள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களால் தமிழகம் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது பற்றி 5 லட்சம் புத்தகங்களை தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறோம். இந்த யாத்திரையில் கொண்டுசெல்லப்படும் புகார் பெட்டியில் திமுக மீது ஆயிரக்கணக்கில் மக்கள் ஊழல் புகார்களை அளிக்கின்றனர் என்றார்.
பின்னர் சுதாகர் ரெட்டி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பெரும் அளவிலான வரவேற்பால் தற்போது இந்த யாத்திரை மக்கள் யாத்திரையாக மாறியுள்ளது
அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த யாத்திரையால் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட திமுக, தமிழக மக்களை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சனாதன தர்மம் இந்து மக்களின் வாழ்க்கை நெறி. உலக அளவில் பிரதமர் மோடியின் புகழையும், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, சனாதன தர்மம் பற்றிய சர்ச்சையை ஏற்படுத்துகிறது
‘இந்தியா’ கூட்டணியில் திமுகவுடன் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி அமைச்சர் உதயநிதி மற்றும் திமுகவையும் இந்த விவகாரத்தில் கண்டிக்காதது ஏன் ? ” என்று கேள்வி எழுப்பினார்.