கோவை காருண்யா பல்கலையில் செப் 5 அன்று சமீர் குமார் எனும் உதவி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் 1 மாதம் முன்பு தான் காருண்யாவில் சேர்ந்துள்ளார்.
இதற்கு முன் 3 ஆண்டுகள் ராஞ்சியில் உள்ள பல்கலையில் பணியாற்றியுள்ளார். ஆகஸ்ட் மாதம் காருண்யாவில் முதலில் இவருக்கு வார்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது தனக்கு பிடிக்கவில்லை என துறை பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார், அவரும் 1 மாதத்தில் மாற்றி தருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் செப் 5 அன்று அவரது உடல், காருண்யா பல்கலையில் அவர் தங்கியிருந்த அறையில் கிடைத்தது. பின்னர் ஜார்கண்ட் அனுப்பி வைக்கப்பட்டது. தங்கள் மகன் மரணத்தில் மர்மம் உள்ளது, அவன் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என குடும்பத்தினர் கூறுகிறார்கள். சிபிஐ விசாரணை கோரி ஜார்கண்ட் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தினர்.
இறப்பதற்கு 2 நாட்கள் முன் தொலைபேசியில் பேசும் போது, பல்கலையில் போதை மருந்து புழக்கத்தை தான் கண்டுபிடித்ததாக கூறியுள்ளார் சமீர். இதன் காரணமாக அவருக்கு ஏதாவது நடந்திருக்கலாம் என குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
இதில் ஆச்சரியமூட்டும் விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய பல்கலையில் நடந்த இந்த சம்பவம் தமிழக மீடியாக்களில் வரவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியா ராஞ்சி பதிப்பு மற்றும் சில ஹிந்தி ஊடகங்களில் தான் முதலில் செய்தி வெளியானது.
தற்கொலை என்றால் FIR நிச்சயம் போட்டிருப்பார்கள், போஸ்ட்மார்ட்டம் முடித்து தான் உடலையே அனுப்பியிருப்பார்கள். ஏன் தமிழகத்தில் ஒரு ஊடகம் கூட இச் செய்தியை வெளியிடவில்லை, அல்லது காவல்துறையும் காருண்யா நிர்வாகமும் சேர்ந்து ஊடகத்திற்கு தகவல் தரவில்லையா ? என பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.