‘‘சனாதன தர்மத்தை எதிர்ப்பது திமுக மற்றும் ‘இ.ண்.டி.’ கூட்டணி கட்சி தலைவர்களின் நோக்கம் அல்ல, அதற்கு மாறாக சனாதன தர்மத்தை முற்றிலுமாக ஒழிப்பதே அவர்களின் நோக்கம்,’’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில்; சனாதன எதிர்ப்பு என்பது திமுகவின் அறிவிக்கப்பட்ட கொள்கை அதை தனிப்பட்ட முறையில் உணர்ந்து உள்ளேன். அவர்களின் இது போன்ற கொள்கையால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். மொழி தெரியாத காரணத்தினால் பிற மாநில மக்களுக்கு திமுகவினரின் கொள்கையும், பேச்சும் புரியாமல் இருந்தது.
தற்போது சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் அமைச்சர் பேசியது என்ன என்பதை மொழி பெயர்ப்பாளர்கள் இல்லாமலேயே பிற மாநில மக்கள் புரிந்து கொள்கின்றனர். எங்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக திமுக இதையே செய்து வருகிறது. அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் மூலம் அரசியலமைப்பை கேலிக்கூத்து ஆக்கியுள்ளார். அமைச்சர் பதவி ஏற்கும் போது அவர் ஏற்றுக் கொண்ட உறுதி மொழியை மீறுகிறோம் என்பது தெரிந்தே சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் பேசியுள்ளார்.
சனாதன தர்மத்தை எதிர்ப்பது திமுக மற்றும், இ.ண்.டி. கூட்டணி கட்சி தலைவர்களின் நோக்கம் கிடையாது, அதற்கு மாறாக சனாதன தர்மத்தை முற்றிலுமாக ஒழிப்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளை காங்., தலைவர்கள் ஆதரித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.