திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் திமுக அரசின் சுகாதாரத்துறை இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த சிறுவன் மரணத்தில் இருந்தும் திமுக அரசு பாடம் கற்றுக்கொள்ளாமல் செயலற்று இருந்து வந்த நிலையில் தற்போது திருவாரூரில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் வயதானவர்கள் வரை யாரையும் பாரபட்சம் பார்க்காமல் பரவி வரும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அனைவரையும் பீதியடைய செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அரசு எவ்வித தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் செயலற்று உள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை. காய்ச்சல் வந்த பிறகே தெரிய வருகிறது. கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் மர்மக் காய்ச்சலுக்கு சிலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தான், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தார். காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர் சிந்து உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர்கள், உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றனர்.
இனியாவது இந்த விடியா அரசு விழித்துக்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க முன் வருமா? அல்லது வழக்கம் போல சனாதன தர்மத்தை ஒழிப்போம் வேறு திசையில் கவனத்தைத் திருப்புமா ?