அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பின் செய்தித்தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 16) நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி முதல்வர் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி என்.சேஷசாயி, சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகள், தேசத்துக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு என விளக்கமளித்தார்.
இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா. குடிமகன் நாட்டை நேசிக்கக் கூடாதா? நாட்டுக்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டிய கடமை இல்லையா? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி, நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம் எனக் கூறிய நீதிபதி, அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, அதற்காக பயிரை ஏன் வேரறுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ -மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்தை, திமுகவில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்களா? அல்லது வழக்கம் போல அந்நிய விசுவாத்தால் இந்து மதத்திற்கு எதிரான விஷம பிரசாரத்தை முன்னெடுப்பார்களா? என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…