மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதற்கு கடவுள் என்னை தேர்வு செய்தார் என புதிய நாடாளுமன்றம், லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தொடர்ந்து மத்திய அமைச்சர் அர்ஜூன்மேக்வால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார்.
புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சந்திரயான் 3 திட்டம் வியத்தகு வெற்றியை பெற்றுள்ளது. விநாயகர் சதுர்த்தியில் புதிய மசோதாக்களை கொண்டு வருவது சிறப்பு வாய்ந்தது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முதல் நாள் பெருமை வாய்ந்த நாளாகும். வளமான எதிர்காலம் துவங்கியுள்ளது. கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறி செல்ல வேண்டும். கொள்கைகள் வெவ்வேறாக இருக்கலாம். நமது குறிக்கோள் தேசத்தை முன்னேற்றி செல்ல வேண்டும் என்பது தான்.
தமிழர்களின் பெருமையை உணர்த்தும் செஙகோல் இங்கு வைக்கப்பட்டுள்ளது. நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது பெருமாமையான தருணம். இந்த கட்டடம் உருவாவதற்கு ஆயிரகணக்கான தொழிலாளர்களின் உழைப்பு மிகப்பெரியது. இந்த தருணத்தில் 140 கோடி மக்களின் சார்பாக உழைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்கு அதிகளவு பெண்கள் சேர வேண்டும். விண்வெளி துறையோ, விளையாட்டு துறையோ பெண்களின் பங்களிப்பை உலகம் உற்று நோக்குகிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசுவது மட்டும் போதாது அதனை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை தேவை. பெண்களுக்கான முன்னேற்றத்தை முன்னெடுப்போம். குறிப்பாக ஜி20 மாநாட்டில் பெண்களின் முக்கியத்துவம் இருந்தது. பெண்களுக்காகவே ஜன்தன் திட்டம் உருவானது.
இன்றைய தினத்தில் நாம் அனைவரும் புதிய வரலாறு படைத்திருக்கிறோம். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டத்தில் வரலாற்றில் இடம்பிடிக்கும் நிகழ்வு அரங்கேற உள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி பல ஆண்டுகளாக விவாதம் நடைபெறுகிறது. பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு கடந்த 1996ம் ஆண்டு முதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பல முறை முயற்சி நடந்தது. மகளிர் மசோதா என்பது பெண்களின் வலிமைக்கான மசோதா. இதனால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். நீண்ட காலமாக பெண்கள் உரிமைக்கான கனவு தொடர்ந்து நிறைவேறாமலேயே இருந்தது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதற்கு கடவுள் என்னை தேர்வு செய்தார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.