நாடு முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதிவரை ‘சுகாதார சேவை’ என்ற பெயரில் பிரமாண்ட தூய்மைப்பணி நடந்து வருகிறது. பண்டிட் தீன் தயாள் ஜி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பிறந்தநாளையொட்டி இந்த பிரசாரம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 1-ம் தேதி காலை 10 மணிக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் எனவும் அதில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி பங்கேற்குமாறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அக்டோபர் 1ம் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மைப்பணி நடைபெறும். நாடு முழுவதும் மார்க்கெட் பகுதிகள், ரயில் தண்டவாளங்கள், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தூய்மைப் பணி நடைபெறும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அதில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், சிவில் விமான போக்குவரத்து, ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள், பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மைப் பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனியார் அமைப்புகள் ஆகியவை இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.