டெல்லி மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி. மாபெரும் வெற்றி!

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளையும் கைப்பற்றி ஏ.பி.வி.பி. அமைப்பு மாபெரும்  வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டோர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 52 கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று வரும் மாணவர்கள் வாக்கு செலுத்தினர்.

இத்தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தேர்தலில் தலைவர், துணை தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் என நான்கு பதவிகளுக்கான போட்டி நடைபெறும். பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்த 24 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். இதில் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.), அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எஸ்.ஏ.), இந்திய மாணவர்கள் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வேட்பாளர்கள்  களம் கண்டனர்.

அதன்படி டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஏ.பி.வி.பி வேட்பாளர்கள் துஷார் தேதா 3,115 வாக்குகள் வித்தியாசத்தில் தலைவர் பதவியையும், அப்ரஜிதா 12,937 வாக்குகள் வித்தியாசத்தில் செயலாளர் பதவியையும், சச்சின் பைசாலா 9,995 வாக்குகள் பெற்று இணைச் செயலாளர் பதவியையும் வெற்றி பெற்றனர். 

டெல்லி மாணவர்கள் மத்தியில் தேசபக்த இயக்கங்கள் வலுவாக இருப்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top