மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை வழங்கினார்.
சென்னை எழும்பூரில் இன்று ( 26.09.2023 ) நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர், அவர்களுக்கு பணியில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பிப்பதால் காலி பணியிடங்களை நிரப்ப வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வேலைக்கு வருகின்றனர்.
தமிழகத்தில் இருப்பவர்கள் தேர்வு எழுதி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம், என்று கூறினார்.