காங்கிரசை நடத்துவது நகர்ப்புற நக்சல்கள்: மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பேச்சு!

காங்கிரஸ் கட்சியை தற்போதைய நிலையில் நகர்ப்புற நக்சல்கள் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. ஏழைகளின் வீடுகளும், காலனிகளும் சினிமா படப்பிடிப்புகளாக மாறிவிட்டன என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பா.ஜ.க. தொண்டர்களை ஒன்று திரட்டும் “கார்யகர்த்தா மகாகும்பம்” நிகழ்ச்சி மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை. கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த அவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு சாகச சுற்றுலாதான். அவர்களுக்கு ஏழை மக்களின் வீடுகளும், காலனிகளும் வீடியோ படப்பிடிப்புக்கான இடங்களாக மாறிவிட்டன. இதைத்தான் கடந்த காலத்திலும் செய்திருக்கிறார்கள். பா.ஜ., அரசு நாட்டின் வளர்ச்சி மற்றும் மகத்தான முகத்தை உலகுக்கு எடுத்துரைக்கிறது. எனது இயல்பு, கடின உழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை என்பது வேறு. என்னைப் பொறுத்தவரை நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மேல் எதுவும் இல்லை. நான் சிரமங்களை எதிர்கொண்டாலும், நாட்டு மக்களை எதையும் இழக்க விடமாட்டேன்.

வளர்ந்த இந்தியாவிற்கு வளர்ந்த மத்தியப் பிரதேசம் மிகவும் முக்கியமானது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வே ஆட்சிக்கு வர வேண்டும். எனவே ஒவ்வொரு தொண்டர்களின் பொறுப்பும் தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும். இந்த ‘கார்யகர்த்தா மகாகும்பம்’ தொண்டர்களின் ஆற்றலைக் காட்டுகிறது. ‘கார்யகர்த்தா மஹாகும்பம்’ நிறைய விஷயங்களைச் சொல்கிறது. இங்குள்ள மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க.தான் ஆட்சி செய்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

அதேசமயம் ஊழல் நிறைந்த ஒரு குடும்பக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் அது மாநிலத்திற்குப் பெரிய இழப்பாகும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநில வளர்ச்சி பாதிக்கும். மீண்டும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். மகளிர் இட ஒதுக்கீட்டை கைவிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீட்டை கிடப்பில் வைத்திருந்தனர். பெண்களுக்கு பா.ஜ.க. அங்கீகாரம் அளித்து, விமர்சனங்களை பொய்யாக்கி இருக்கிறது.

அதேபோல எதிர்கட்சிகள் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எதிர்த்தனர். ஆனால் உலகமே யு.பி.ஐ.யை பாராட்டி வருகிறது. அது மட்டுமா பழங்குடியினர் ஒருவர் குடியரசுத் தலைவராவது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது தரமான சாலைகள் அமைப்பது, இரயில் நிலையங்கள் அமைப்பதிலும் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியால் இந்தியாவில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை பார்த்து ஜீரணிக்க முடியவில்லை. நாடு வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. நாட்டின் சாதனைகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பெருமிதம் கொள்வதில்லை. ஏனென்றால், அவர்கள் நாடு முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியடைவதை விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ., உழைத்துக் கொண்டிருந்தால் காங்கிரஸ் ஓட்டுக்காக உழைக்கிறது. மத்திய பிரதேசத்தில் இரட்டை இன்ஜின் அரசு அமைந்ததால் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு பின்னர் இந்தியாவில் சுமார் 13 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top