தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார். மகபூப்நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் மாநில அரசை கடுமையாக சாடினார்.
நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:- தெலங்கானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் பயிரிடும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய மஞ்சள் வாரியம் அமைக்கப்படும். இது வினியோகச் சங்கிலியில் மதிப்புக் கூட்டல் மற்றும் விவசாயிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு உதவும்.
மஞ்சள் வாரியம் அமைப்பதற்காக தெலங்கானா மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் மஞ்சள் விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மேன்மை மிகு நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன் சிறப்பு நிதியும் அளிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தில் மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம் அழைக்கப்படும். அதற்கு பழங்குடியினரின் தெய்வமாகிய சம்மக்கா-சாரக்காவின் பெயர் சூட்டப்படும்.
இந்த பல்கலைக்கழக கட்டுமானத்துக்காக ரூ.900 கோடி செலவிடப்படும். இதற்காக தெலங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தெலங்கானா மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பா.ஜ., உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.