நமது பாரத நாட்டில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை வருகின்ற அக்டோபர் 10ம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு கனடா அரசிடம் இந்தியா கெடு விதித்துள்ளது. இல்லையேல், அதன் பின்னர் அவர்களது தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் எனவும் மத்திய அரசு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாபில் கடந்த 1980 முதல் 1990 வரை காலகட்டத்தில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் உருவெடுத்தன. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் பெயரில் தனி நாடு கோரி அந்த அமைப்புகள் பாரத நாட்டிற்கு எதிரான தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் பிரிவினைவாத அமைப்புகள் அடியோடு ஒடுக்கப்பட்டன. இதனால் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் கனடாவுக்கு தப்பிச் சென்றனர். அங்கு அவர்களுக்கு அந்நாட்டு அரசு குடியுரிமை வழங்கியது.
இதற்கிடையே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தூண்டுதலால் கனடாவில் வசிக்கும் சிலர் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐஎஸ்ஐ அமைப்பும் தாராளமாக நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு தப்பிச்சென்ற ஹர்தீப் சிங் நிஜார் என்பவர், ‘காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து, பாரதத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை தேடப்படும் தீவிரவாதியாக மத்திய அரசு கடந்த 2022-ல் அறிவித்தது. அவரை பாரதத்திடம் ஒப்படைக்குமாறு பலமுறை வலியுறுத்தியும், கனடா அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் மர்ம நபர்களால் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனங்களை தெரிவித்தது.
இந்த சம்பவத்தால் இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிஜார் கொலையில் தொடர்பு இருப்பதாக கனடாவில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரி ஒருவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதற்கு பதிலடியாக, இந்தியாவில் பணியாற்றிய கனடா நாட்டின் தூதரக மூத்த அதிகாரி அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
பிரச்சினை தொடர்ந்து நிலவி வரும் இந்நிலையில், தொடர்ந்து பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் வெளியேற வேண்டும் எனவும் காலக்கெடு விதித்துள்ளது. அதற்குள் வெளியேறவில்லை எனில் தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.