தமிழகத்தில் உள்ள கோயில்களை திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது என தெலங்கானா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக அரசு மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் உள்ள கோயில்களை மீட்க காங்கிரஸ் கட்சியால் முடியுமா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 3) அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
‘காங்கிரஸ் தற்போது, மக்கள் தொகைக்கு ஏற்ப உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அப்படியானால் காங்கிரஸ் சிறுபான்மையினருக்கு எதிராக, தென்னிந்திய மக்களுக்கு எதிராக இருக்கிறதா என்று விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரசின் இந்த நிலைப்பாட்டால், தொகுதி மறுவரையறையின் பின்னால் நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை தென்னிந்தியா ஏற்குமா? காங்கிரசிடம் இதுதொடர்பாக அதன் கூட்டணிக் கட்சிகளும் கேள்வி கேட்க வேண்டும்.
காங்கிரசின் புதிய முழக்கத்தின்படி, இந்து கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டு, அதன் சொத்துகள் பயன்படுத்தப்படுவது போல, சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களையும் காங்கிரசும், அதன் கூட்டணி அரசுகளும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமா?
தற்போது அரசால் கட்டுப்படுத்தப்படும் இந்து கோவில்களின் உரிமையை இந்து மக்களிடமே காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் திரும்ப ஒப்படைக்குமா? தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்தையும் திமுக அரசு ஆக்கிரமித்துள்ளது. அதனை விடுவிக்க காங்கிரஸ் கட்சி முன்வருமா என்றார்.
ஏழைகளுக்கு சேவையாற்றுவதே உண்மையான சமூகநீதி. எங்கள் அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஏழை மக்களின் நலனுக்காக இடையறாது பணியாற்றி வருகிறது. இந்தப் பணியில் அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும்.
பா.ஜ., மீது தெலங்கானா மக்கள் நம்பிக்கை வைத்து 5 ஆண்டுகாலம் ஆட்சியில் அமர்த்த வேண்டும். அப்போது மக்களிடம் இருந்து மற்ற கட்சிகள் கொள்ளையடித்ததை திரும்ப கொண்டுவந்து சேர்ப்போம்.
பாரத ராஷ்டிர சமிதியும், காங்கிரசும் திரைமறைவு கூட்டணி அமைத்துள்ளன. கர்நாடகா தேர்தலிலும் காங்கிரசுக்கு பாரத ராஷ்டிர சமிதி ஆதரவு அளித்தது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.