சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்த ‘நியூஸ்கிளிக்’ இணைய ஊடகத்தின் நிறுவனர் புர்கயஸ்தா உட்பட இரண்டு பேரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று (அக்டோபர் 3) கைது செய்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது, நியூஸ்கிளிக் இணைய ஊடக நிறுவனம். அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் சமீபத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் சீனாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, நியூஸ்கிளிக் இணைய ஊடகத்துக்கு அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் பெருந் தொகை கொடுத்திருப்பதாக தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
நியூஸ்கிளிக் நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாகவும் நமது பாரத நாட்டுக்கு எதிராகவும் செயல்படுவதாக டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு கடந்த ஆகஸ்ட் 17ல் வழக்குப் பதிவு செய்திருந்தது. மிகவும் கடுமையான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாட்டுக்கு எதிராகச் செயல்படுவது, மத ரீதியில் மோதல்களை ஏற்படுத்துவது, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடு உட்பட 30 இடங்களில், டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று (அக்டோபர் 3) சல்லடை போட்டு சோதனை செய்தனர். இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தினரால் சில ஆவணங்கள் அழிக்கப்பட்டதாகவும், அவை உடனடியாக மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது நிறுவனத்தில் பணியாற்றும் ஒன்பது பெண்கள் உட்பட 46 பேரிடம் டெல்லி போலீசார் அதிரடியான விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ‘நியூஸ்கிளிக்’ இணைய ஊடகத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மேலாளர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று (அக்டோபர் 3) கைது செய்தனர். மேலும், அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக, நியூஸ்கிளிக் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியரான பிரபிர் புர்கயஸ்தா மீது ஏற்கனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.