நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று (அக்டோபர் 5) தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ.) பயங்கரவாத எதிர்ப்பு 3-வது மாநாடு நடைபெறுகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மாநாட்டிற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், “நமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.
இன்று என்.ஐ.ஏ.வின் 3-வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டைத் தொடங்கி வைக்கிறேன். இம்மாநாட்டில் நமது தேசம் ஏற்றுக்கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கைக்குப் பின்னால் மோடி ஜியின் தொலைநோக்குப் பார்வை குறித்து விளக்க உள்ளேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
டெல்லி சாணக்யபுரி பகுதியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடைபெறும் இம்மாநாட்டில், பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சாலை வரைபடத்தை தயாரிப்பது குறித்தும், சம்பந்தப்பட்ட பிற அமைப்புகள் மற்றும் அரசுப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இம்மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் பல்வேறு படைகளைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.