சனாதனம் பற்றி பேசிய அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சேகர்பாபு ஆகியோர் மீதான வழக்கில் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து, வழக்கை 11ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.
சென்னையில் கடந்த மாதம் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டு பேசுகையில், சனாதனம் டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்ட நோய்களுடன் ஒப்பிட்டு, சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல ஒழிக்கப்பட வேண்டியது என்று கூறினார். உதயநிதியின் இந்த கூற்றுக்கு எதிராகத் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. பல்வேறு மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன.
இதனிடையே சனாதனம் பற்றி தவறான கருத்தைப் பரப்பிய உதயநிதி, திமுக எம்.பி., ராசா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு காவல் நிலையங்களிலும், தமிழக அரசிடமும் பா.ஜ., இந்து அமைப்புகள் புகார்கள் அளித்தன. ஆனால் அதன் மீது திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இதன் காரணம் உதயநிதி, சேகர்பாபு, ராசா உள்ளிட்டோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் கிஷோர் வழக்குத் தாக்கல் செயதார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சனாதனம் பற்றி அவர்கள் பேசிய அனைத்து ஆதாரங்களையும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை வருகின்ற அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.