இன்னும் இரண்டே ஆண்டுகளில் நாடு முழுதும் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதே சயத்தில், நக்ஸல் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே, அவர்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்காமல் பாதுகாக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதில் அரசு சந்திக்கும் சவால்களையும் அவர் பட்டியலிட்டு பேசினார்.
நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான ஆய்வு செய்யும் கூட்டம் டெல்லியில் நேற்று (அக்டோபர் 6) நடந்தது.
இக்கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, மாநில தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்கள் உட்பட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2014ம் ஆண்டு முதல் நக்சல் எனப்படும் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கும் கொள்கையை அரசு பின்பற்றி வருகிறது. இதன் பலனாக கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான உயிரிழப்புகள் 2022ல் பதிவாகின.
நக்சல் அமைப்புகள் மனிதகுலத்துக்கான மிகப் பெரிய சாபக்கேடு. அதன் அனைத்து வடிவங்களையும் அடியோடு அறுத்து எறிய வேண்டும். இதை சமாளிப்பதில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன.
இடதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்கான நிதி உதவி கிடைக்கும் வழிகளை முடக்க, பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் மக்கள் மற்றும் போலீஸ் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அவர்களுக்கான நிதி ஆதாரங்களை முடக்க, தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறையினர் மாநில விசாரணை அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர்.
நக்சல் பிடியில் இருந்து மீட்கப்பட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும். அப்போது தான், அங்கு நக்சல் நடமாட்டம் மீண்டும் தலைதூக்காமல் பாதுகாக்க முடியும். அதோடு அவர்கள் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடையாமல் இருப்பதையும் கண்காணிக்க வேண்டும்.
பாதிப்படைந்த அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பால் கடந்த சில ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் வெற்றி கிடைத்துள்ளது. அந்த போராட்டம் இப்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. தீவிரவாத ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் 2019 முதல் சுருங்கியபடியே வருகின்றன.
கடந்த 2005 – 14 உடன் ஒப்பிடுகையில் 2014 – 23 காலகட்டத்தில் இடதுசாரி தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட வன்முறைகள் 52 சதவீதம் குறைந்துள்ளன; உயிரிழப்புகள் 69 சதவீதம் குறைந்துள்ளன.
பாதுகாப்பு படையினர் தரப்பிலான உயிரிழப்புகள் 72 சதவீதமும் பொதுமக்கள் தரப்பிலான உயிரிழப்புகள் 68 சதவீதமும் குறைந்துள்ளன. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு மத்திய உதவி திட்டங்கள் வாயிலாக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை 3,296 கோடி ரூபாய் செலவில் 80 சதவீத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான செலவுகளை மோடி அரசு இரட்டிப்பாக உயர்த்தி உள்ளது. எனவே இன்னும் இரண்டே ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நக்ஸலிசம் மனிதகுலத்திற்கு ஒரு சாபமாகும். அதை அனைத்து வடிவங்களிலும் வேரோடு பிடுங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, டெல்லியில் இன்று (அக்டோபர் 6) நடைபெறும் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இடதுசாரி தீவிரவாதம் இல்லாத தேசம்” என்று குறிப்பிட்டிருந்தார்.