கோவில் சொத்துக்களை பொது ஏலத்துக்கு கொண்டு வராதது ஏன்? திமுக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் எந்த நிபந்தனை அடிப்படையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டது,  ஏன் பொது ஏலத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்பதற்காக அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கழுகுமலையை சேர்ந்த வெள்ளதுரை என்பவர் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுவெள்ளதுரை தனது மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது; 

கழுகுமலையில் மிகவும் பழமையான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. அந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோவிலுக்கு சொந்தமாக 292 ஏக்கர் நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளன. இதனை கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை முறையாக பராமரிப்பதில்லை. மேலும் பொது ஏலம் நடத்தாமல், விதிகளை பின்பற்றாமல் சிலரின் பயன்பாட்டிற்காக சொத்துக்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில தனிப்பட்ட நபர்கள் பயனடைகின்றனர்.

அவர்களிடம் இருந்து குறைந்த வாடகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பலர் கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆக்கிரமித்துள்ள அந்த  நபர்களை வெளியேற்ற நடவடிக்கை இல்லை.

தூத்துக்குடி ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர், கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறையின் அனுமதியின்றி அனுபவிக்கும் நபர்களை குத்தகைதாரர்களாக ஏற்றுக் கொண்டு வாடகை வசூலிக்கப்படுகிறது. இவர்களை குத்தகைதாரர்களாக வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கழுகுமலையில் குறிப்பிட்ட பட்டா எண்ணில் குத்தகைதாரர்கள் உள்ளனர். இச்சொத்திற்கு பொது ஏலம் நடத்த சாத்தியக்கூறுகள் இல்லை என உத்தரவிட்டுள்ளார். இது ஆக்கிரமிப்பாளர்களை வரன்முறைப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். குத்தகைதாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்து பொது ஏலம் நடத்தி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு வெள்ளதுரை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது; இணை கமிஷனரின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சொத்துக்களை குத்தகைக்கு அனுமதிக்க குழு அமைக்கப்பட்டதா, எந்த நிபந்தனைகள் அடிப்படையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்டது, ஏன் பொது ஏலத்திற்கு கொண்டுவரவில்லை.

குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்கள் தற்போது யார், யாரிடம் உள்ளது. அதன் மூலமாக கிடைத்த வருவாய் எவ்வளவு என்ற விவரங்களை அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் அறிக்கையாக அக்டோபர் 18ல் தாக்கல் செய்ய வேண்டும்’. 

கோயில் சொத்துக்களை காப்பாற்ற, ஊருக்கு ஊர், எண்ணற்ற வெள்ளைச் சாமிகள் தேவைப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆலய மீட்பு  ஆர்வலர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top