டெல்லி திகாரில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும், மேலும் ரூ.500 கோடி தர வேண்டும், இல்லையெனில் பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தையும் குண்டு வைத்து தகர்ப்போம் என இ-மெயில் வாயிலாக மத்திய பாதுகாப்பு துறைக்கு
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி மும்பை போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) முன் எச்சரிக்கை நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு பிரிவுக்கு மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்துள்ளது. அதில், ‘‘சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவிக்க வேண்டும். ரூ.500 கோடி தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்வோம், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தையும் குண்டுவைத்து தகர்ப்போம்.
” நீங்கள் எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தாலும், நீங்கள் எங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியாது. நீங்கள் பேச விரும்பினால், நாங்கள் கூறியதை செய்யுங்கள்’’ என அந்த மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த மிரட்டல் இ-மெயில் மத்திய பாதுகாப்பு பிரிவுக்கு வந்ததது பற்றி மும்பை போலீசார் மற்றும் குஜராத் போலீசார், பிரதமரின் பாதுகாப்பு தொடர்புடைய அமைப்புகளுக்கு என்.ஐ.ஏ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது போன்ற மிரட்டல்கள் பிரதமருக்கு புதிதல்ல. பல்வேறு பயங்கரவாத இயக்கங்களை பிரதமர் நரேந்திர மோடி வேரோடு அழித்து வருவதால் எதிரிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்து விட்டால் பயங்கரவாத ஒழிப்பு முகாம்கள் அனைத்தும் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என்பது அவர்களுக்கு தெரிந்து விட்டது. இதன் காரணமாகவே மிரட்டல் வரத் தொடங்கியுள்ளது என்கிறது பாதுகாப்புத்துறை தரப்பு.