உயர்த்தப்பட்ட நிலை மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (அக்டோபர் 16) சென்னையில் நடைபெற்றது.
430 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உயர்த்தப்பட்ட 25 சதவீத பரபரப்பு நேர (பீக் ஹவர்) கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பல்முனை ஆண்டுக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதோடு 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3பி-யில் இருந்து 3ஏ1 நடைமுறைக்கு மாற்ற வேண்டும் ஆகிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 25-ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், ஏற்கனவே விடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று (அக்டோபர் 16) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இது பற்றி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ் ஆகியோர் கூறியதாவது: எங்களது 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அடுத்தக் கட்டமாக நவம்பர் 6-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதன் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், டிசம்பர் 4-ம் தேதி தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவோம். டிசம்பர் 18-ல் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
விவசாயிகள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், டாக்டர்கள் போராட்டம், சிறு குறு தொழில் முனைவோர் போராட்டம் என போராட்டக் களமாக தமிழக மாறி வருவது, மக்களிடையே விரைந்து திமுக தலைவர் செல்வாக்கை இழந்து வருவதை நிரூபிக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இதன் விளைவு தெரிய வரும்..!