ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாரதா கோவிலில் நவராத்திரி பூஜை நடைபெற்றிருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகாமையில் கிஷன்கங்கா ஆற்றின் கரையில் தீட்வால் என்ற இடத்தில் சாரதா தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கி.மு.237-ல் அசோகர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இயற்கைச் சீற்றங்களாலும், அந்நியப் படையெடுப்பு காரணமாகவும் இக்கோவில் பலமுறை சேதப்படுத்தப்பட்டது. கடைசியாக 19-ம் நூற்றாண்டில் குலாப் சிங் மகாராஜா என்பவரால் கோவில் மீண்டும் சீரமைக்கப்பட்டது. காஷ்மீர் பண்டிட்களுக்கு சாரதா கோவில்தான் வணங்கும் கடவுளாக இருந்துள்ளது..
இக்கோவிலில் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் இருந்துள்ளது. இந்த நூல்களை படிப்பதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறிஞர்கள் வந்திருக்கிறார்கள். இஸ்லாமிய ஆட்சி காலத்தில் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது.
கடந்த 1947 சுதந்திரத்துக்குப் பின்னர் இக்கோவிலில் மூடப்பட்டு வழிபாடுகள் நிறுத்தப்பட்டன.
எனவே இக்கோவிலை சீரமைத்துத் தருமாறு இந்து பண்டிட்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், மத்திய பாஜக அரசு சாரதா தேவி கோவிலை சீரமைக்கின்ற வேலையில் ஈடுபட்டது. இப்பணி முடிந்து கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், இக்கோவிலில் முதல் முறையாக நவராத்திரி பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதுதான் ஆழ்ந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆண்டின் தொடக்கத்தில் சைத்ரா நவராத்திரி பூஜை நடத்தப்பட்டது. தற்போது ஷர்தியா நவராத்திரி பூஜையின் மந்திரங்கள் சன்னதியில் ஒலிக்கின்றன. புனரமைப்புக்குப் பிறகு 2023 மார்ச் 23-ம் தேதி கோவிலை தான் மீண்டும் திறந்தது அதிர்ஷ்டம். இது பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது நாட்டின் ஆன்மிக மற்றும் கலாச்சார சுடர் புத்துயிர் பெறுவதையும் குறிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.