நவராத்திரி திருவிழாவின் முதல் 3 நாட்களில் ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி குகைக் கோவிலில் 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டம் திரிகூட மலையில் வைஷ்ணவ தேவி குகைக் கோவில் அமைந்திருக்கிறது. குளிர்கால தலைநகர் ஜம்முவில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக, நவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில் கோலாகலமாக நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தி பெற்றது.
இத்திருவிழாவின் போது நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வைஷ்ணவ தேவியை வழிபடுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு வைஷ்ணவ தேவி கோவில் வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இத்திருவிழாவை முன்னிட்டு, வைஷ்ணவ தேவியை தரிசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அந்த வகையில், நவராத்திரி பண்டிகையின் முதல் 3 நாட்களில் மட்டும் 1.27 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து வைஷ்ணவ தேவியை தரிசித்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்திருவிழா வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகவே, சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைஷ்ணவ தேவியை வழிபட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.