‘ஒட்டுமொத்த உலகமும் புதிய நம்பிக்கையுடன் இந்தியாவை உற்று நோக்குகிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும் ‘இந்தியா, மத்திய கிழக்கு -ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உலக கடல்சார் வர்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது’ என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் இந்த முயற்சியில் பங்கேற்றுமாறு உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மூன்றாவது உலக கடல்சார் இந்திய உச்சி மாநாடு மும்பையில் நேற்று (அக்டோபர் 17) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவின் கடல்சார் திறன்கள், உலகுக்கு எப்போதும் நன்மை பயக்கும் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா, -மத்திய கிழக்கு -ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்துக்கான கருத்தொற்றுமை எட்டப்பட்டது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய பட்டுப்பாதை வழித்தடத்தைப் போல், இதுவும் செழுமைக்கான இடமாக இருக்கும். உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தை மாற்றியமைக்கும் ஆற்றல்கொண்ட இந்த வழித்தடம் அடுத்த தலைமுறை வசதிகளுடன் மாபெரும் துறைமுகங்கள், விரிவான பன்முக மையங்கள் கட்டமைப்பு, தீவுகள் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கியதாகும்.
இது வர்த்தக செலவு, சுற்றுச்சூழல் சேதங்களைக் குறைப்பதோடு, சரக்கு கையாளுகை செயல்திறனை மேம்படுத்தும். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
உலக-பிராந்திய வர்த்தகதகத்தில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இந்த வழித்தட முன்னெடுப்பில், இந்தியாவுடன் இணைந்து பங்கேற்க உலக முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.