பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று ( 19.10.2023 ) மாலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.
கடந்த 1941ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தவர் பங்காரு அடிகளார். இவர் ஆதிபராசக்தி தொண்டு நிறுவனம், மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை அமைத்து இறை பணி ஆற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 19) மாலை மாரடடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82. இவரின் திடீர் மறைவு தமிழகத்தின் ஆன்மீக அன்பர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் இவரது மறைவுக்கு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மிகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.
இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா:
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.
அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத அவரது ஈடுபாடும் என்றென்றும் நினைவு கூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தருவானாக. ஓம் சாந்தி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் இறைவன் திருவடி அடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய ஆதிபராசக்தி அம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களின் குருவாகவும், ஆன்மிக மற்றும் கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவரும், ஏழை, எளிய மக்களின் வழிகாட்டியாகவும் விளங்கிய பங்காரு அடிகளார் அவர்களது மறைவு, நமது சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரின் ஆன்மிக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் தமிழக பாஜக சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னையின் அவதாரமாக நம்மிடையே வாழ்ந்து முக்தியடந்த அவரது பிரிவைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் அம்மன் வழங்கட்டும். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.