ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம் அடங்கிய சென்னை ராஜதானியை மொழிவாரி மாநிலமாக உருவாக்கி, தமிழகத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக அல்ல; அண்ணாத்துரை அல்ல; கருணாநிதி அல்ல; தமிழரசு கழகத்தை தோற்றுவித்த தமிழ்த் தென்றல் ம.பொ.சி.
தமிழ்நாடு எல்லைகளை காப்பாற்றியவரும், அதற்காக போராடியவரும் ம.பொ.சி அவர்களே. காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே, காங்கிரஸை எதிர்த்து, காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து தமிழுக்காக, தமிழ் நாட்டிற்காக போராடியவர் தமிழர் தந்தை ம.பொ.சி. அதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் ம.பொ.சியிடம் இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஆந்திரத்தை சேர்ந்த பொட்டி ஶ்ரீராமுலு. அவர்தான் முதன்முதலில் தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் கேட்டதோடு, சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக்கவும் குரல் கொடுத்தார். ‘மதராஸ் மனதே’ என்றார். அதற்காக உண்ணாவிரதம் இருந்து 1952ல் டிசம்பர் 15ல் சென்னையிலே உயிரை விட்டார். ஆந்திரம் அல்லோகலப்பட்டது. வன்முறை தலைவிரித்தாடியது. ஆந்திரா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேரு தலைமையிலான மத்திய அரசு விழித்துக் கொண்டு, மொழிவாரி மாநிலங்களை பிரிக்க 1953ல் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபசல் அலி தலைமையில் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தது. அதைத் தொடர்ந்து 1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதற்குப் பின், 1956 நவம்பர் 1ந்தேதி இந்தியாவில் 14 மொழிவாரி மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன அதில் தமிழகமும் ஒன்று.
“தமிழகம்” மெட்ராஸ் மாநிலமாக அறிவித்ததை தமிழ் ஆர்வலர், விடுதலை போராட்ட வீரர் சங்கரலிங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ம.பொ.சியும் உடன்படவில்லை. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென வலியுறுத்தி, சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து 1956ல் உயிர் நீத்தார்.
அன்றைய காலகட்டத்தில் சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தவர் காமராஜர். அவரிடம் 1955 முதல் தமிழ்நாடு பெயர் மாற்றம் பற்றி வலியுறுத்தி பலதடவை பேசியவர் ம.பொ.சி. பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ம.பொ.சி. அதனை காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் காட்டிய தமிழுணர்ச்சியற்றப் போக்கு தமிழ் ஆர்வலர்களுக்கு வியப்பையும், வேதனையும் அளித்தது.
1960 டிசம்பர் 25ம் நாள் “தமிழ்நாடு” கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்திற்கு தேதி நிர்ணயிக்கும் மாநாட்டை சென்னை கோகலே ஹாலில் ம.பொ.சி துவக்கினார். அந்த மாநாட்டில் காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30, 1961ல் தமிழ்நாடு பெயர் மாற்றம் போராட்டத்தை துவங்க தீர்மானிக்கப்பட்டது.
1946ல் ம.பொ.சியால் துவக்கப்பட்ட தமிழரசு கழகம் மட்டுமே, இந்த கோரிக்கைக்காக தமிழகம் தழுவிய போராட்டம் அறிவித்தது. அன்றைக்கு காங்கிரஸ் கட்சி பெரிதாக இதற்கு முனைப்பு காட்டவில்லை. அதே நேரத்தில் தமிழ், தமிழ்க்காகவே, தமிழர் நலனுக்காகவே திமுக என்று சொன்ன அண்ணாவோ, அதன் இரண்டாம் கட்டத் தலைவர்களான கருணாநிதியோ, நெடுஞ்செழியனோ, என்.வி. நடராசனோ, மதியழகனோ இதற்கு முன்முயற்சியும் எடுக்கவில்லை.
‘தமிழ்நாடு பெயர் கோரிக்கை வாரம்’ ம.பொ.சியின் தமிழரசு கழகம் நாடு முழுவதும் நடத்தியது. கல்லூரி மாணவர்களிடையே போராட்ட உணர்வு அலைமோதியது. மெயில், இந்து நாளேடுகள் பெயர் மாற்றக் கோரிக்கைப் போராட்டத்தை கண்டனம் செய்து தலையங்கங்கள் தீட்டின. தினத்தந்தி, தமிழ்நாடு, ஆனந்தவிகடன், குமுதம், தினமலர் பத்திரிக்கைகள் ஆதரித்து எழுதின. நாடகச் செம்மல் பம்மல் சம்மந்த முதலியார் இந்த போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விட்டார். அகில இந்திய சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் ராம்மனோகர் லோகியா போராட்டத்தை ஆதரித்தார். (Ref: ம.பொ.சியின் எனது போராட்டம்: பாகம் 2: பக்கம்464)
தமிழ்நாடு பெயர் கோரிக்கையைச் செயல்படுத்தும் அதிகாரம் அரசியல் சட்டம் 1வது பாகம் விதி எண் 3-2 பிரிவின்படி மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்டது. மாநில அரசு இசைவு தெரிவித்தால், மத்திய அரசு நிறைவேற்றத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அன்றைய முதல்வர் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் அரசு “தமிழ்நாடு பெயர்” கோரிக்கையை எதிர்த்தது. அதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே, திரு ம.பொ.சி மாநில அரசின் போக்கை எதிர்த்து போராடினார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முகப்பு வாயிலில் திட்டமிட்டபடி, தமிழரசு கழகத்தினர் ஜனவரி 1961, 30ல் போராட்டத்தை துவக்கினார்கள். ஆயிரக்கணக்கோர் கூடி, கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பலரும் முகப்பு வாயிலில் செல்லாமல், பின்புற வழியாக கோட்டைக்குள் சென்றனர். முதல்வர் காமராஜ் மட்டும் வழக்கமான காரில் வராமல், மாற்று காரில் கோட்டைக்கு வந்தார். அதன்பின் கோட்டை வாயில்கள் மூடப்பட்டன. பாதுகாப்பு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் திரு பி. எஸ். சின்னதுரை ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைத் தீர்மானம் ஒன்றை சட்டசபையில் கொடுத்திருந்தார். அதுவும், போராட்ட நாளில், ஜனவரி 30ல் சட்டசபையில் விவாதிக்கப்பட இருந்தது. அந்த தீர்மானத்தை இப்போதைக்கு விவாதிக்க முடியாது என சட்டசபையில் அமைச்சர் சி. சுப்ரமண்யம் கூறியது மேலும் எதிர்கட்சிகளுக்கு எரிச்சலைத் தந்தது. சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறவில்லை. சட்டமன்ற நிகழ்வுகளால், தமிழ்நாடு பெயர் மாற்றப் போராட்டம் அகில இந்திய அளவில் பேசும் பொருளானது. தமிழகம் முழுவதும் போராட்டம் சூடு பிடித்தது.
திரைத்துறையை சார்ந்தவர்கள் ஒளவை சண்முகம் தலைமையில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை மக்கள் திலகம் எம்ஜிஆர், எஸ்எஸ் ராஜேந்திரன் வந்திருந்து வாழ்த்தி வழி அனுப்பியதை ஏராளமான மக்கள் கூடி வரவேற்றனர். கலைக்காவலர் எம்.ஏ. வேணு, இயக்குநர் ஏபி நாகராஜன் படிப்பிடிப்பை காலவரம்பின்றி நிறுத்திவிட்டு, போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழரசு கழகத் தூண்களான கு.சா. கிருஷ்ணமூர்த்தி, கு.மா. பாலசுப்ரமண்யம், பிரபல பாடகி குருவாயூர் பொன்னம்மாள், கவி. கா.மு. ஷெரிப், புலவர் கீரன், கோ. கலிவரதன், மதுரை சா. கலியாணசுந்தரம் போன்றவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை வழிநடத்தினார்கள். ஒட்டு மொத்த தமிழகத்தில் சுமார் 1700 பேர் காங்கிரஸ் அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
10.2.1961 அன்று மதுரையில் பேசிய தமிழக நிதியமைச்சர் சி. சுப்ரமண்யம் ‘தமிழ்நாடுப் பெயரை எந்த நேரத்தில், எவ்வாறு மாற்றுவது என்று அரசுக்குத் தெரியும். தகுந்த சமயத்தில் அரசு செய்ய வேண்டியதைச் செய்யும்’ என உறுதியளிப்பதாக பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சு சம்மந்தமான தனது கருத்தை ஒரு கடிதம் மூலம் ம.பொ.சி, நிதி அமைச்சருக்கு தெரியபடுத்தினார்.
அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சரும் பிப்ரவரி 1961, 15ந்தேதி பதில் கடிதம் எழுதினார். அதில் இம்மாதம் 22, 23, 24 தேதிகளில் இந்த பெயர் மாற்ற விவகாரம் சட்டசபையில் தெரிவித்து முடிவு எடுக்கும் வரை பொறுத்திருங்கள். மேலும், நமது சென்னைக்கு பிரிட்டீஸ் ராணி 19, 20, 21 தேதிகளில் வர இருக்கிறார்கள். அந்த நேரத்தில் போராட்டம், கிளர்ச்சிகள் தவிர்ப்பது நல்லது என நினைக்கிறேன். என பதில் கடிதம் எழுதினார் அமைச்சர் சி. சுப்ரமண்யம். அதைத் தொடர்ந்து, போராட்டத்தை ம.பொ.சி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். தினமணி, நம்நாடு, தினச்செய்தி, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடுகளும், ஆனந்த விகடன், குமுதம் வார இதழ்கள் இது ம.பொ.சிக்கு கிடைத்த ஆரம்ப வெற்றி என எழுதின.
1962ல் இந்திய – சீனப் போர் வந்ததினால், ம.பொ.சி தனது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். சீனப்போர் நின்றதுமே, தமிழக கல்லூரிகளில் தமிழை பயிற்சி மொழியாக்க போராடிக் கொண்டிருந்தபோது, புதிய கல்வி அமைச்சராக வந்த பக்தவச்சலம் தமிழை ஒரு பாடமொழி என்ற நிலைக்குத் தாழ்த்தி, கல்வி முழுவதும் ஆங்கில மயமாக்கிவிட முயன்றார். தமிழக அரசு தமிழ் மொழிக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டது. இது தமிழ் ஆர்வலர்களுக்கு வேதனை தந்தது. இந்நிலையில் 1963ல் எம். பக்தவச்சலம் முதலமைச்சர் ஆனார். ம.பொ.சியும் தொடர்ந்து, கறுப்புக் கொடி காட்டுவது, மறியல் செய்வது போன்ற போராட்டங்களை முன்னெடுத்தார்.
ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்கு காங்கிரஸ் கட்சி ம.பொ.சியை பழி வாங்கியது. காங்கிரஸ் கட்சியால் வழங்கப்பட்ட பொறுப்புகளை ராஜிநாமா செய்ய வற்புறுத்தியது. ம.பொ.சியின் தமிழ்ப் பற்றை பாவேந்தர் பாரதிதாசன் வரவேற்றார். மு. வரதராசனார், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், கல்லூரி பேராசிரியர்கள், தமிழ்ப் புலவர்கள், ஆளுமைகள் வரவேற்றனர். அன்றைக்கு திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இவரது ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வோதயாத் தலைவர் திரு ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களும், ஜனசங்கத் தலைவர் டாக்டர் ரகுவீர் அவர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினர்கள். காங்கிரஸ் கட்சி இவரை கைவிட்டது.
தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவருமே, எந்த கட்சியினராக இருந்தாலும், மொழிப்பிரச்சனையில் மனசாட்சிப்படி நடந்து கொள்ளவில்லை. மாறாக, தங்களுடைய அரசியல் வாழ்வுக்கு இலாபம் தரும் வகையில் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி எல்லாம் நடந்து கொண்டார்கள்.
1956, நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, தமிழர்கள் வாழும் நிலப்பரப்பு தனி மாநிலமாக மாறியது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ந்தேதி மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டது.
1962ல் தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கைக்காக தனி மசோதா கொண்டு வரப்பட்டபோது, நாடாளுமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. அதன் தொடர்ச்சியாக மாபொசி அவர்களின் தனிநபர் மசோதாவை கட்சியின் நிலைப்பாடக ஏற்று, 1968 ஜூலை 18ல் சென்னை மாநிலம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் அண்ணாவால் கொண்டுவரப்பட்டது. பின்னர் நவம்பர் 23, 1968ல் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது. பிறகு 1968 டிசம்பர் 1ல் தமிழ்நாடு பெயர் மாற்ற விழாவாக கொண்டாடப்பட்டபோது, அதற்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாருக்கு வீர வணக்கமும், ம.பொ.சிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, தமிழகம் தனி மாநிலமாக பிறந்தநாள் 1956, நவம்பர் 1. தமிழத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைத்த நாள் 1968 ஜுலை 18. அதற்கு விழா எடுத்த நாள் டிசம்பர் 1.
“மதராஸ் மனதே” என சென்னையில் ஆந்திர மக்கள் கோரிக்கை வைத்தபோது, தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம் என சூளுரைத்தவர் ம.பொ.சி. இவரது போராட்டத்தை தாங்க முடியாமல் மத்திய அரசு சென்னையை தமிழகத்தின் தலைநகராக்கியது.
மெட்ராஸ் ஸ்டேட் என்பதை “தமிழ்நாடு” என பெயரிடப் போராட்டங்களை கையில் எடுத்து, வெற்றி பெற்றவர் ம.பொ.சி. திருப்பதி ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் மாலவன் குன்றம் போனால் என்ன வேலவன் குன்றத்தையாவது(திருத்தணி) மீட்போம் எனப் போராடி திருத்தணியை மீட்டவர் ம.பொ.சி.
கன்னியாகுமரி, பீர்மேடு, தேவிகுளம் பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து போராடி, குமரியையும், செங்கோட்டை பகுதிகளை தமிழகத்தோடு இணைத்தவர் ம.பொ.சி. அதற்காக மார்ஷல் நேசமணி உண்ணாவிரதம் இருந்து தமிழகத்திற்காக உயிரையே விட்டார்.
தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிந்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை அன்றைய தமிழக அரசு 25 அக்டோபர் 2012 வெளியிட்டது. அதன்படி, தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு தினம் கொண்டாட அறிவுறுத்தப்பட்டது. 2019ல் பதவியேற்ற அதிமுக அரசு நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு தினமாக அறிவித்தது. அதனை அரசு விழாவாக கொண்டாடியது. இந்நிலையில் 2021ல் பொறுப்பேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாளான ஜுலை 18ம் நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்திருப்பது வியப்பினை அளிக்கிறது. இதிலும் அரசியல் செய்கிறது திமுக.
மாநிலம் உருவான நாள் 1956 நவம்பர் 1. தமிழகத்திற்கு பெயர் வைத்தநாள் 1968 ஜுலை 18. குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவார்களா? பெயர் வைத்த நாளைக் கொண்டாடுவார்களா?
தமிழக வரலாற்றில், முத்திரை பதித்த தமிழர் தந்தை ம.பொ.சி மட்டும் இன்று இருந்திருந்தால், இதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இது தமிழுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் திமுக செய்யும் துரோகமாகவே கருத வேண்டியிருக்கிறது.
தமிழை காட்டுமிராண்டி மொழி எனச் சொன்ன பெரியாரை தமிழர் தந்தை, தமிழ் இனக் காவலர், பகுத்தறிவு காவலன் என கொண்டாடிய கூட்டம். ம.பொசியை கொண்டாடாமல், தமிழ்நாடு தினத்தை மாற்றிக் கொண்டாடுவது தமிழுக்கு செய்யும் இன்னெரு அவமரியாதையாகத்தான் இதை கருத வேண்டியுள்ளது. வரலாறு திருத்தப்பட வேண்டும் நேரம் இது. ஐயா ம.பொசியை தமிழகத்தின் தந்தை எனக் கொண்டாடுவோம், நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு தினமாகக் கொண்டாடுவோம்.