நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் வளர்ச்சியை மனதில் வைத்து வாக்களியுங்கள்! ஆர்எஸ்எஸ் தலைவரின் விஜயதசமி உரை

இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் மரியாதைக்குரிய திரு சங்கர் மஹாதேவன் அவர்களே, மேடையில் இருக்கும் மானனீய சர்கார்யவாஹ் அவர்களே, விதர்பா பிராந்த்தத்தின் மரியாதைக்குரிய சங்கசாலக், மற்றும் நாக்பூர் மஹாநகர் சங்கசாலக் மற்றும் சஹசங்கசாலக் அவர்களே,  மரியாதைக்குரிய பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே மற்றும் ஸ்வயம் சேவகர்களே.

அசுரத்தன்மைக்கு எதிராக மனிதகுலத்தின் பரிபூரண வெற்றியை, ஒவ்வொரு வருடமும் விஜயதசமியாக நாம் கொண்டாடுகிறோம்.  இந்த வருடம் நமக்கு பெருமைக்குரிய, மகிழ்ச்சியளிக்கும் மற்றும் உற்சாகமூட்டும் பல விஷயங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு ஜி20 கவுன்சிலின் தலைமை பொறுப்பை நமது நாடு ஏற்றது. ஆண்டு முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அறிஞர்கள் பங்கேற்ற பல கருத்தரங்குகள், மாநாடுகள், பாரதத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. பாரதீயர்களின் விருந்தோம்பல், பாரதத்தின் வரலாற்று பெருமைகள், தற்போது பாரதம் கண்டுள்ள வளர்ச்சி, பல நாட்டு பிரதிநிதிகளை வியக்க வைத்தது.

ஆப்பிரிக்க யூனியனையும் இதன் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் தீர்மானம், மாநாட்டின் முதல் நாளிலேயே நிறைவேற்றப்பட்டது. பாரதத்தின் நல்லெண்ணம் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினர். வசுதைவ குடும்பகம் எனும் பாரதத்தின் தொலைநோக்கு சிந்தனை, உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக ஆகியுள்ளது.

ஜி20 மாநாட்டின் நோக்கம், பொருளாதார வளர்ச்சி என்பதை தாண்டி, மனிதகுல மேன்மை என்று உயர்ந்துள்ளது. இந்த நிகழ்வு, பாரதத்தை உலகரங்கில் உன்னத நிலைக்கு உயர்த்தியுள்ளது. பாராட்டுக்குரிய இந்த சாதனையை நமது தலைவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த முறை நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன்முறையாக 100-க்கும் மேற்பட்ட ( 107 பதக்கங்கள், 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்கள்) வென்று நம் அனைவரின் உற்சாகத்தை அதிகரித்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நம் பாராட்டுக்கள்.

சந்திரயானின் வெற்றி பாரதத்தின் வலிமை, அறிவு மற்றும் யுக்தியை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. நமது விஞ்ஞானிகளின் அறிவியல் ஞானம், செயல்திறன் மற்றும் நமது தலைமையின் உறுதி ஆகியவை இணைந்து, இது சாத்தியமாக்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில், உலகிலேயே முதல் நாடாக பாரதத்தின் விக்ரம் லேண்டர் இறங்கியுள்ளது. பாரதீயர்களின் பெருமை, தன்னம்பிக்கையை உயர்த்தியுள்ள இந்த சாதனையை புரிந்த விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் உதாரண புருஷர்களின் பெருமைகளை, அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நாட்டு மக்களின் கடமை. நமது அரசியலமைப்பு சட்டத்தின் கையெழுத்து பிரதியில், வரையப்பட்டுள்ள தர்மத்தின் ஸ்வரூபமான ஸ்ரீராமர், பால ரூபத்தில் அருள்பாலிக்கும் கோவில் அயோத்தியில் கட்டப்பட்டு வருகிறது. வருகின்ற ஜனவரி 22 அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அந்த குறிப்பிட்ட நல்ல நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஸ்ரீராமர் நமது நாட்டின் ஒழுக்கத்தின் சின்னம், கடமையின் சின்னம்,  நட்பு மற்றும் அன்பின் சின்னம். நமது வாழ்க்கை மற்றும் நம்மை சுற்றியும் இப்படியான சூழலை உருவாக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவிலில் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் இதயத்தில் குடிகொண்டுள்ளார். அயோத்தியில் இருப்பது போல எங்கும் நிறைந்திருக்கிறார் ஸ்ரீராமர். இந்த நல்லெண்ணத்தை மேலும் பரப்பும் வகையில், ஆங்காங்கே சிறிய அளவிலான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும். இதன் மூலம் சமுதாயத்தில் ஒற்றுமை, பரஸ்பர அன்பு, பொறுப்புணர்வு ஆகியவை அதிகரிக்கும்.

பல நூற்றாண்டுகள் சந்தித்த இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து, நமது நாடு தற்போது  பொருளாதார மற்றும் ஆன்மிக முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள இந்த சம்பவங்களே இதற்கு சாட்சி, இதை காணும் நாம் பாக்கியசாலிகள்.

உலகம் முழுவதற்கும் தனது வாழ்க்கையின் மூலம் அஹிம்சை, கருணை, அறத்தை போதித்த, மஹாவீரர் நிர்வாணம் எய்திய 2550வது வருடம், அந்நியர் ஆக்கிரமிப்பு காரணமாக அடிமைப்பட்டிருந்த தேசத்தை விடுவித்த சத்ரபதி சிவாஜி ஹிந்து சுயராஜ்யம் நிறுவிய 350வது வருடம், ஆங்கிலேயரின் அடிமைத்தனத்தில் இருந்து மக்கள் விடுபட, மக்கள் சுயத்தன்மையை உணர வேண்டும் என்ற நோக்கில், சத்யார்த்த பிரகாசம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய தயானந்த சுவாமியின் 200வது பிறந்த ஆண்டு ஆகியவற்றை கொண்டாடி வருகிறோம்.

நமது மக்களுக்கு உத்வேகம் ஊட்டிய 2 பெரும் சான்றோர்களின் பிறந்த ஆண்டும் வருகிறது. விடாமுயற்சி, தைரியம், சாதுரியம், வீரம், வலிமை இவற்றின் அடையாளமாக திகழ்ந்து சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த மஹாராணி துர்காவதியின் 500வது ஆண்டு இது.   தலைமை பண்பு, எளிமை, தேசபக்தி என்று அனைத்தின் உறைவிடமாகவும், பாரதீய பெண்களுக்கு ஊக்கமளிக்கும் சக்தியாகவும் அவர் திகழ்கிறார். மக்கள் நலன், நிர்வாக திறமை இவற்றுடன் சமுதாய ஏற்ற-தாழ்வுகளை களைய தன் வாழ்க்கையை அர்ப்பணித்த கோலாபூர் (மஹாராஷ்ட்ரா) அரசர் ஷாஹுஜி மஹாராஜின் 150வது பிறந்த ஆண்டு இது. இளம்பருவத்திலேயே, நாடு சுதந்திரம் அடையவேண்டியது குறித்து விழிப்புணர்வு ஊட்டினார்.

ஏழைகளுக்கு அன்னசாலை திறந்த துறவி ராமலிங்க அடிகள் எனும் வள்ளலாரின் 200வது பிறந்த நாள் இந்த மாதம் கொண்டாடப்பட்டது. அன்னதானம் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் (வடலூரில்) அவர் மூட்டிய அந்த அடுப்பு கனல் இன்றும் எரிந்துக் கொண்டிருக்கிறது, தன் கடமையை செய்து வருகிறது. சுதந்திர உணர்வுடன், ஆன்மீக விழிப்புணர்வு பெறவும், சமுதாயத்தில் இருந்த சமத்துவமின்மையை ஒழிக்கவும், தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் வள்ளலார்.

மேன்மைகள் பொருந்திய இந்த சான்றோர்களை நாம் நினைவில் கொள்வதன் மூலம், சுதந்திரத்தின் அம்ருத மஹோத்சவம் நிறைவைடையும் வேளையில் சமூக சமத்துவம், ஒற்றுமை, சுய-பாதுகாப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய முடியும்.

தன் ஸ்வதன்மையையும், தன் அடையாளத்தையும் பாதுகாக்க மனிதன் இயல்பாகவே முயற்சிக்கிறான். உலகம் வேகமாக சுருங்கி வரும் வேளையில், தங்கள் சுய அடையாளம் குறித்து சிந்திக்கும் போக்கு அனைத்து நாடுகளிலும் தற்போது அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் ஒரே நிறத்தில் அடையாளப்படுத்தவோ அல்லது ஒரே புள்ளியில் இணைக்கவோ மேற்கொள்ளபட்ட எந்த முயற்சியும் இதுவரை வெற்றி பெறவில்லை; எதிர்காலத்திலும் வெற்றி பெறாது.

பாரதத்தின் அடையாளத்தையும் ஹிந்து சமுதாயத்தின் பெருமைகளையும் பேண வேண்டும் என்ற எண்ணம் இயற்கையானது.  இன்றைய உலகின் சம காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பாரதம் தனது சொந்த அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்குப் பொருத்தமான, புதுப்பொலிவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.  மதங்கள், சம்பிரதாயங்களில் வெறி, ஆணவம், வெறுப்பு ஆகியவற்றை உலகம் எதிர்கொள்கிறது. சுயநலத்தால் உருவாகிய மோதல் மற்றும் தன்னை நிலை நிறுத்தும் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள உக்ரைன் மற்றும் காசா போர்களுக்கு எந்த தீர்வும் காணக் கிடைக்கவில்லை. இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறை, சுயநலம், அளவற்ற நுகர்வு போன்றவற்றால் புதிய உடல், மன நோய்கள் உருவாகின்றன. ஒழுங்கீனங்களும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதீத சுயநல காரணங்களால் குடும்பங்கள் உடைகின்றன. அளவிற்கு மீறி இயற்கையை சுரண்டுதல், மாசுபடுத்தல், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதம், சுரண்டல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன.

உலகம் தனது இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள திறனற்றதாக இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. எனவே, பாரதம் தனது கலாச்சாரம், சனாதனம் (அழிவற்றதன்மை) மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில், தனது செயல்கள் மூலம் உண்மையான மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான புதிய பாதையை உலகுக்குக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலைகளின் ஒரு சிறிய காட்சி பாரதத்திலும் நம் முன் இருக்கிறது.

உதாரணமாக, ஹிமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் முதல் சிக்கிம் வரையிலான இமயமலைப் பகுதியில் தொடர்ச்சியாக இயற்கை பேரழிவுகளை சமீபத்தில் காண்கிறோம். இந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் சில தீவிரமான மற்றும் பெரிய பிரச்சனைகளின் முன்னறிவிப்பாக இருக்குமோ என்ற சந்தேகமும் உள்ளது.

பாரதத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்தப் பகுதி, நாட்டின் எல்லைப் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது; என்ன விலை கொடுத்தாகிலும் பாதுகாக்கப்பட வேண்டியது. பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மக்கள் தொகை மற்றும் வளர்ச்சியின் பார்வையில், இந்த முழுப் பகுதியும், ஒரே அலகாகக் கொண்டு இமயமலைப் பகுதியைக் குறித்து சிந்திக்க வேண்டும். இந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதி புவியியல் கண்ணோட்டத்தில் விசேஷமாக இருப்பதோடு மாறிக் கொண்டும் இருக்கிறது. அதன் நிலப்பரப்பு, புவியியல், பல்லுயிர் வளங்கள் மற்றும் நீர் வளங்களின் சிறப்பியல்புகளை அறியாமல் தன்னிச்சையான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த குழப்பத்தின் விளைவாக, இந்த பிராந்தியத்தோடு கூட ஒட்டுமொத்த நாடும் நெருக்கடியின் விளிம்பிற்கு வந்து கொண்டிருக்கிறது. பாரதம் உள்ளிட்ட கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் அனைத்து நாடுகளின் தண்ணீர் தேவைக்கு முக்கியமான பகுதி இது என்பதை நாமனைவரும் அறிவோம். பாரதத்தின் இந்த வடக்கு எல்லைப்பகுதியின் மீது பல ஆண்டுகளாகவே சீனா கண் வைத்திருக்கிறது. எனவே, இந்த பகுதி சிறப்பு புவியியல், மூலோபாய மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை மனதில் வைத்து, விசேஷமான கண்ணோட்டத்தில் இந்த பகுதி குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்தச் சம்பவங்கள் இமயமலைப் பகுதியில் அதிகம் நடந்தாலும், அவை பற்றிய தெளிவான அறிகுறி நாடு முழுவதும் கவனத்திற்கு வருகிறது. முழுமையடையாத, தீர்க்க கண்ணோட்டம் இல்லாத மற்றும் தீவிர நுகர்வு அடிப்படையிலான வளர்ச்சி திட்டங்கள் காரணமாக, மனிதநேயமும் இயற்கையும் மெதுவாக ஆனால் நிச்சயமாக அழிவை நோக்கி நகர்கின்றன. இந்தக் கவலை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அந்த தோல்விப் பாதைகளை கைவிடுவதன் மூலம் அல்லது படிப்படியாக பின்வாங்குவதன் மூலம், பாரதிய விழுமியங்கள் மற்றும் நமது அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பார்வையின் அடிப்படையில் பாரதம் தனது சொந்த வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டும். இது பாரதத்திற்கு முற்றிலும் ஏற்றதாக இருப்பதோடு, உலகிற்கு ஒரு முன்மாதிரியாகவும் அமையும். பழைய மற்றும் தோல்வியுற்ற பாதையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பிற்போக்குத்தனம்,  செயலற்ற தன்மை ஆகியவற்றை நாம் கைவிட வேண்டும்.

காலனித்துவ மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, நம் நாட்டிற்கு ஏற்றதை மட்டுமே உலகிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் உள்ளதை, காலத்துக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டு நமது சுயம்சார்ந்த சுதேசி வளர்ச்சிப் பாதையை நாம் பின்பற்றுவது காலத்தின் தேவை. இந்தக் கண்ணோட்டத்தில் அண்மைக் காலத்தில் சில கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமூகத்திலும், விவசாயம், தொழில் மற்றும் வர்த்தகம், தொடர்புடைய சேவைகள், ஒத்துழைப்பு மற்றும் சுயதொழில் ஆகிய துறைகளில் புதிய வெற்றிகரமான முயற்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் சிந்தித்து வழிகாட்டும் அறிவுஜீவிகள் மத்தியில் இந்த மாதிரியான விழிப்புணர்வின் தேவை அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் ‘சுய’ அடிப்படையிலான காலத்துக்கேற்ற கொள்கையும், நிர்வாகத்தின் தயார் நிலை, சீரான மற்றும் மக்கள் நலன் சார்ந்த பணிகள், சமுதாயத்தின் சிந்தனை, சொல் மற்றும் செயல்களின் மூலம் சமுதாயத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் மட்டுமே நாட்டை மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும்.

ஆனால் இவை நடக்காமல் இருக்கவும், சமூகத்தின் ஒத்திசைவு சின்னா பின்னமாகி பிரிவினை மற்றும் மோதல்களை அதிகரிக்க செய்யவும் சில சக்திகள் விரும்புகின்றன.   நமது அறியாமை, கவனக்குறைவு, பரஸ்பர அவநம்பிக்கை அல்லது விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால், சமூகத்தில் சில இடங்களில் இதுபோன்ற எதிர்பாராத குழப்பங்கள் மற்றும் பிளவுகள் அதிகரித்து வருகின்றன. உலக நலன் மட்டுமே பாரத எழுச்சியின் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த எழுச்சியின் இயல்பான விளைவாக, சுயநல, பாரபட்சமான மற்றும் வஞ்சக சக்திகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதால் அவர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வருகின்றது. இந்தச் சக்திகள் ஏதோ ஒரு சித்தாந்த போர்வையை அணிந்துகொண்டு, நல்ல குறிக்கோளுக்காக வேலை செய்வதாகக் காட்டிக்கொண்டாலும், அவர்களின் உண்மையான நோக்கங்கள் வேறு ஏதோவொன்றுதான். நம்பகத்தன்மையுடனும், சுயநலமில்லாமலும், புத்திசாலித்தனத்துடனும் பணிபுரிபவர்கள், அவர்களின் சித்தாந்தம் எதுவாயினும்; அவர்கள் எந்த வகையான வேலையைச் செய்தாலும், அவர்களுக்கு எப்போதும் தடைகள் ஏற்படுகின்றன.

இப்போதெல்லாம் இந்த சர்வவல்லமையுள்ள சக்திகள் தங்களை கலாச்சார மார்க்சிஸ்டுகள் அல்லது வோக் (Woke) என்று அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களும் 1920களிலேயே மார்க்ஸை மறந்துவிட்டார்கள். உலகில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை, மங்கல சடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகளை அவர்கள் எதிர்க்கின்றனர். வெகு சிலர், முழு மனித இனத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில், அராஜகத்தையும், குழப்பத்தையும் ஊக்குவிக்கிறார்கள். இவற்றை பரப்ப பொருளதவியும் செய்கிறார்கள். ஊடகங்கள் மற்றும் கல்விக்கூடங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம், தேசத்தில் கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமுதாயத்தை குழப்பம் மற்றும் சீர்கேட்டிற்கு உள்ளாக்குவது தான் அவர்களின் திட்டம். இத்தகைய சூழலில், திரிக்கப்பட்ட மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் பயம், குழப்பம், வெறுப்பு ஆகியவை எளிதில் பரவுகின்றன. இதனால், பரஸ்பர மோதல்களில் சிக்குகின்ற சமூகம், குழப்பத்தினாலும், பலவீனத்தாலும் உடைந்து, தங்களின் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இருக்கின்ற இந்த அழிவுச் சக்திகளிடம், தங்களை அறியாமலேயே சுலபமாக இரையாகிறார்கள். ஒரு தேசத்தின் மக்களிடையே அவநம்பிக்கை, குழப்பம் மற்றும் பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் இந்த வகையான செயல்பாடு, பொதுவான வழக்கத்தில் அறிவுசார் கிளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

தங்களது அரசியல் லாபங்களைக் கருத்தில் கொண்டு, அரசியல் போட்டியாளரைத் தோற்கடிக்க இதுபோன்ற தேவையற்ற சக்திகளுடன் கூட்டணி அமைப்பது விவேகமற்றது. சமூகம் முன்பை விடவும் தன்னை மறந்து, பல வகையான பிளவுகளால் சிதைந்து, சுயநலம், பொறாமை, வெறுப்பு ஆகியவற்றின் கொடிய போட்டியில் சிக்கியுள்ளது. அதனால்தான் இந்த அசுர சக்திகளுக்கு சமூகத்தையும், தேசத்தையும் உடைக்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவு கிடைக்கிறது.

மணிப்பூரின் இன்றைய நிலையைப் பார்த்தால், இந்த விஷயம் தெரியவருகிறது. சுமார் பத்தாண்டுகளாக அமைதியாக இருந்த மணிப்பூரில் இந்த பரஸ்பர முரண்பாடு எப்படி திடீரென வெடித்தது? வன்முறையில் ஈடுபட்டவர்களில் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளும் இருந்தார்களா? தங்களின் எதிர்காலத்தைப் பற்றியே கவலை கொண்டிருக்கும் மணிப்பூரிலுள்ள மெய்தி, குக்கி சமூகத்தினரிடையே நிலவிய மோதலை வகுப்புவாதமாக்கும் முயற்சி ஏன்? யார் இதை செய்கிறார்கள்? பல ஆண்டுகளாக அனைவருக்கும் சம நோக்குடன் சேவை செய்து வரும் சங்கம் போன்ற அமைப்பை தேவையில்லாமல் இழுக்க முயற்சிப்பதில் யாருக்கு லாபம் கிடைக்கிறது? நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ள எல்லை மாநிலமாகிய மணிப்பூரில் நிலவும் அமைதியின்மை மற்றும் உறுதியற்ற நிலையின் மீது ஆர்வம் கொண்டுள்ள கொண்டுள்ள வெளிநாட்டு சக்திகள் எவை? இந்த சம்பவங்களில் தென்கிழக்கு ஆசியாவின் புவிசார் அரசியலுக்கு ஏதேனும் பங்கு உள்ளதா?  நாட்டில் பலம் வாய்ந்த அரசு இருந்தும், யாருடைய ஆதரவில் இத்தனை நாட்களாக இந்த வன்முறை கட்டுக்கடங்காமல்  தொடர்கிறது? கடந்த 9 ஆண்டுகளாக அமைதியை நிலைநாட்ட மாநில அரசு முயன்று வந்த போதும் ஏன் இந்த வன்முறை வெடித்தது?   பரஸ்பரம் சண்டையிட்டுக்கொண்ட இரு தரப்பு மக்களும் அமைதியை நாடும் இன்றைய சூழ்நிலையில், எந்த ஒரு நேர்மறையான நடவடிக்கையும் எடுக்கப்படுவதைக் கண்டால், அதனை தடுத்து வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் சக்திகள் எவை?  இந்த சிக்கலை தீர்க்க பல பரிமாண முயற்சிகள் தேவைப்படும். இதற்கு, அரசியல் உறுதியும், அதற்கேற்ற செயல்திறனும், காலத்தின் தேவையாக இருக்கும். அதே வேளையில், பரஸ்பர அவநம்பிக்கையின் இடைவெளியைக் குறைப்பதில் சமுதாயத்தின் அறிவார்ந்த தலைமையும் விசேஷமாக பங்காற்ற வேண்டும். 

சங்க ஸ்வயம்ஸேவகர்கள் தொடர்ந்து அனைவருக்கும் சேவை, நிவாரணப் பணிகளைச் செய்வதோடு சமுதாயத்தின் பண்பாளர்களிடம் அமைதி நிலவச் செய்வதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.  அனைவரையும் நம்மவராக பாவித்து எவ்விலை கொடுத்தாயினும் நிலைமையை புரிய வைத்து பாதுகாப்பாக, அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவைப்பதற்கான எல்லா முயற்சிகளையும் சங்கம் செய்து வருகிறது.  இந்த பயங்கரமான மற்றும் குழப்பமான சூழ்நிலையிலும், அமைதியான மனதுடன் அனைவரையும் நல்ல முறையில் கவனித்துக்கொண்ட கார்யகர்த்தர்கள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

இந்த அறிவுசார் கிளர்ச்சிக்கு சமுதாய ஒற்றுமையின் மூலம் தான் சரியான விடை காண வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இந்த ஒற்றுமை உணர்வுதான் சமூகத்தின் மனசாட்சியை விழிப்படையச் செய்யும் விஷயம். இந்த உணர்வுபூர்வமான ஒற்றுமையை அடைவது ஒரு வழிகாட்டும் கோட்பாடாக அரசியலமைப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், இந்த ஒற்றுமை உணர்வை உருவாக்கும் அடித்தளம் வேறுபடுகிறது.

சில இடங்களில், அந்த நாட்டின் மொழி, சில இடங்களில் அந்த நாட்டில் வசிப்பவர்களின் பொதுவான வழிபாடு அல்லது நம்பிக்கை, சில இடங்களில் அனைவருக்கும் பொதுவான வணிக நலன்கள், சில இடங்களில் மைய அதிகாரத்தின் வலுவான பிணைப்பு நாட்டு மக்களை ஒன்றாக இணைக்கிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தளங்களிலோ அல்லது பொதுவான சுயநலத்தின் அடிப்படையிலோ கட்டப்பட்ட ஒற்றுமையின் இழை நீடித்தது அல்ல. நம் நாட்டில் பல வேறுபாடுகள் உள்ளன. இந்த நாடு ஒரே நாடாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். ஆனால், நமது இந்த நாடு, ஒரு தேசமாக, ஒரு சமூகமாக, உலக வரலாற்றில் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து, அதன் கடந்த கால இழைகளுடன் ஒரு அறுபடாத தொடர்பைப் பேணி இன்றும் உயிர்ப்புடன் நிற்கிறது.

இந்த ஒற்றுமையை வெளிநாட்டவர்கள் ஆச்சரியமாக பார்த்தாலும், அவர்கள் இதனால் ஈர்க்கப்பட்டுளார்கள். அதன் ரகசியம் என்ன? சந்தேகத்திற்கு இடமின்றி இது நமது அனைத்தையும் உள்ளடக்கிய கலாச்சாரம் தான்.  வழிபாட்டு முறை, பாரம்பரியம், மொழி, பிரதேசம், சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் உயர்ந்து, நம் சொந்தக் குடும்பத்திலிருந்து உலகக் குடும்பம் முழுவதற்கும் நம் நெருக்கத்தை விரிவுபடுத்துவது நமது நடத்தை மற்றும் வாழ்க்கை முறை.

நம் முன்னோர்கள் ஒற்றுமையின் உண்மையை உணர்ந்தனர். அதன் பலனாக, உடல், மனம், புத்தி ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் முன்னேற்றி, செல்வத்தை நிர்வகித்து முக்தி அடையச் செய்யும் தர்மத்தின் கொள்கையை உணர்ந்தார். அந்த உணர்தலின் அடிப்படையில், தர்மத்தின் நான்கு நித்திய அம்சங்களை (உண்மை, இரக்கம், தூய்மை மற்றும் தவம்) செயல்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை அவர்கள் உருவாக்கினர்.

எல்லா விதத்திலும் பாதுகாப்பான மற்றும் செழிப்பான நமது தாய்நாட்டின் உணவு, நீர் மற்றும் காற்று காரணமாக மட்டுமே இது சாத்தியமானது. எனவே, நமது பாரத பூமியை  நமது சம்ஸ்காரங்களின் தலையாய தாயாகக் கருதுகிறோம், அவளை வணங்குகிறோம். சமீபத்தில், நமது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவில் சுதந்திரப் போராட்டத்தின் மாமனிதர்களை நினைவு கூர்ந்தோம். நமது சமயம், கலாசாரம், சமுதாயம், நாட்டைக் காத்து, காலத்திற்கேற்றவாறு அவற்றுள் தேவையான முன்னேற்றங்களைச் செய்து, பெருமையை உயர்த்திய பெருமக்கள் நம் முன்னோர்கள். நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவும், முன்னுதாரணமாகவும் விளங்கும் நம் முன்னோர்கள் கடின உழைப்பாளிகள்.

நம் நாட்டில் இருக்கும் மொழி, பிரதேசம், ஜாதி, துணை ஜாதி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் ஒன்றிணைத்து நம்மைப் பிணைக்கும் மந்திரங்களாக  தாய்நாட்டின் மீது பக்தி, முன்னோர்களுக்கு பெருமை, அனைவருக்கும் பொதுவான கலாச்சாரம் ஆகியவை உள்ளன.

சமூகத்தின் நிரந்தர ஒற்றுமை தாமாகவே இருந்து வருகிறது. சுயநல ஒப்பந்தங்களால் அல்ல. நமது சமூகம் மிகப் பெரியது. இது பல்வேறு வகைகளால் நிறைந்துள்ளது. காலப்போக்கில், வெளிநாடுகளில் இருந்து சில ஆக்கிரமிப்பு மரபுகள் நம் நாட்டில் நுழைந்தன, ஆனால் நமது சமூகம் இந்த மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகமாகவே இருந்தது. எனவே, ஒற்றுமையைப் பற்றிப் பேசும் போது, எந்தவொரு கொடுக்கல், வாங்கல் மூலமும் இந்த ஒற்றுமை ஏற்படாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வலுக்கட்டாயமாக செய்தால், மீண்டும் மீண்டும் பிரிந்து விடும்.

இன்றைய காலக்கட்டத்தில், சமூகத்தில் கலகம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை இயல்பாகவே பலர் கவலையோடு பார்க்கின்றனர். இதைப் பற்றி கருத்து பரிமாறிக் கொள்ள அடிக்கடி சந்திக்கின்றனர். தங்களை ஹிந்துக்கள் என்று கூறிக்கொள்பவர்களும் சந்திக்கின்றனர், தங்கள் வழிபாட்டு முறையினால் தங்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் சந்திக்கின்றனர்.  அனைவருமே சச்சரவு முரண்பாடுகளை தவிர்த்து நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் அமைதியை விரும்புகிறார்கள்.

இந்த விவாதங்களில் நாம் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டிய முதல் விஷயம் என்னவென்றால், ஒரே பூமியில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தற்செயலாக ஒன்றிணைவது ஒரு பொருட்டு அல்ல. நாம் அனைவரும் ஒரே முன்னோர்களின் வழித்தோன்றல்கள், ஒரே தாய் நாட்டின் செல்வங்கள் ஒரே கலாச்சாரத்தின் வாரிசுகள் என்கிற எண்ணத்தை மறந்து விட்டோம். நமது ஒற்றுமையின் இந்த அடித்தளத்தை புரிந்து கொண்டு இதன் மூலன் நாம் அனைவரும் இணைய வேண்டும்.

நமக்குள் எந்த பிரச்சனையும் இல்லையா? நமது சொந்த வளர்ச்சிக்கான தேவைகளும் எதிர்பார்ப்புகளும் நமக்கு இல்லையா? வளர்ச்சியை அடைய நமக்குள் போட்டி இல்லையா? நாம் அனைவரும் இந்த ஒற்றுமை மந்திரத்தை நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் பதித்து பணி செய்கின்றோமா? அனைவரும் அவ்வாறு செய்வதில்லை என்று நமக்கும் தெரியும். ஆனால் இது நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் முதலில் பிரச்சனைகள் தீர வேண்டும், முதலில் கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும், பிறகு ஒற்றுமையை பற்றி யோசிப்போம் என்று சொல்லி திருப்தி அடைய மாட்டார்கள்.

நாம் நம்முடைய கருத்துக்களை உள்ளடக்கி நம்முடைய செயல்களை துவக்குவோமேயானால் அதிலிருந்து பல பிரச்சினைகளுக்கு விடை கிடைக்கும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளால் மனம் தளராமல் நிதானத்துடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும். பிரச்சனைகள் உண்மையானவை, ஆனால் அவை ஒரு சாதி அல்லது வர்க்கத்திற்கு மட்டும் அல்ல.  அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுடன், நெருக்கம் மற்றும் ஒற்றுமையின் மனநிலையும் உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மனப்பான்மை, ஒருவரையொருவர் அவநம்பிக்கையுடன் பார்ப்பது அல்லது அரசியல் ஆதிக்கத்தின் தந்திரங்களில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்.

இது போன்ற வேலைகளுக்கு அரசியல் தடையாகத்தான் இருக்கும். இது ஒரு வகையான சரணடைதலோ அல்லது நிர்பந்தமோ அல்ல. போரிடும் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் இல்லை. இது இந்தியாவின் அனைத்து வேற்றுமைகளிலும் இருக்கும் பரஸ்பர ஒற்றுமையின் இழைகளில் சேர்ந்திருப்பதற்கான அழைப்பு.  அரசியலமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு நிறைவும் வரப்போகிறது.  அரசியலமைப்பு இந்த திசையை நமக்கு காட்டுகிறது. மதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை அளிக்கும் போது அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய இரண்டு உரைகளைக் கவனித்தால், அதே சாரம் புரியும்.

இது திடீரென நடந்து விடும் காரியமல்ல. முந்தைய காலங்களின் போராட்டங்களின் நினைவுகள் இன்றும் சமுதாயத்தின் மனதில் உள்ளன. பாகுபாட்டின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாமல் உள்ளன. அவற்றின் வினை மற்றும் எதிர்வினைகளின் தாக்கம் மனதில் உதிக்கின்றன. செயல் மற்றும் சொற்களில் வெளிப்படுகின்றன. ஒருவருக்கு மற்றொருவர் வீதிகளில், வீடு கிடைக்காதது முதல் அவர்களிடேயே உயர்ந்தவர், தாழ்ந்தவர், அலட்சிய எண்ணங்கள் வரை கசப்பான அனுபவங்கள் உள்ளன. வன்முறை, கலவரம், அடிதடி போன்ற நிகழ்வுகளில் பரஸ்பரம் பழிபோடுவதும் நடக்கின்றன. ஒரு சிலர் செய்யும் தவறுகளை, மொத்த சமுதாயமும் செய்வது போல பிம்பம் உருவாக்கப்படுகிறது. வார்த்தை போர் நடக்கிறது, தூண்டிவிடப்பட்டு கொந்தளிப்பான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

நம்மை மோதவிட்டு நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு இது சாதகமாகிறது. அவர்கள் இதனை முழுமையாக உபயோகித்து கொள்கிறார்கள். இதனால் தான் சிறிய நிகழ்வுகளை கூட ஊதி பெரிதாக்கி பிரச்சாரம் செய்யப்படுவதை காண்கிறோம். இவற்றுக்கு பரிந்து பேசுவது போல உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இது குறித்து கவலை மற்றும் எச்சரிக்கை தெரிவிப்பது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வன்முறையை தூண்டக்கூடிய டூல்கிட்கள் (Toolkits) முடுக்கிவிடப்படுகின்றன. நமக்குள் நம்பகத்தன்மை, ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பு போன்றவற்றை அதிகப்படுத்தும் வேலைகள் செய்யப்படுகின்றன.

சமுதாயத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவோர் அனைவரும் இந்த அபாயகரமான விளையாட்டின் மாயையில் இருந்து ஒதுங்கி, விலகி இருக்க வேண்டும். இந்த பிரச்சனைகளின் தீர்வும், மெல்ல மெல்ல தான் கிடைக்கும். அதற்கு நாட்டில் நம்பிக்கையும், நல்ல சூழ்நிலையும் நிலவ வேண்டியது அவசியம் மற்றும் கட்டாயம் ஆகும். நமது மனங்களை திடமாக வைத்துக்கொண்டு நம்மிடையே பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கவும், நம்மிடையே புரிந்துணர்வு அதிகரிக்கவும், நம்முடைய பரஸ்பர வழிபாடு, நம்பிக்கைகள் மீது மதிப்பு ஏற்படவும், நம்மிடையே ஒற்றுமை உணர்வு அதிகரிக்கவும் செய்ய வேண்டும். இவற்றை நமது மனம், வார்த்தை, செயல்கள் மூலமாக செய்ய வேண்டும். கோஷங்கள், பிரச்சாரங்கள் இவற்றுக்கு மயங்க கூடாது. திடமான, தீர்க்கமான செயல்கள் மூலமாக நாம் இவற்றை நடத்த வேண்டும். தைரியமாகவும், கட்டுப்பாட்டுடனும், சகிப்புத்தன்மையுடனும், நமது எதிர்மறை வாதங்களை விடுத்து, கோபம் மற்றும் பயம் ஆகியவற்றை விடுத்து, திடமான, தீர்க்கமான, நீண்ட நாட்களுக்கு தொடர் முயற்சி செய்வது இன்றியமையாததாகும். தூய்மையான மனதுடன் செய்யும் எந்த முயற்சியும் அப்போது தான் வெற்றியடையும்.

எந்தவொரு சூழலிலும், எவ்வளவு தூண்டுதல்கள் இருந்தாலும், சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு, குடிமக்களின் கடமைகளை பின்பற்றி, அரசியல் சாசனத்தின்படி நடக்கவேண்டியது அவசியமாகும். சுதந்திர நாட்டில் இவை தேச பக்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் துர்ப்பிரச்சாரங்கள், தூண்டுதல்கள் அதன் காரணமாக வரும் குற்றம் மற்றும் எதிர் குற்றங்களில் சிக்காமல், ஊடகங்கள் மூலம் சமுதாயத்தில் உண்மை மற்றும் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். வன்முறை மற்றும் அடிதடி பிரச்சனைகளை தீர்க்க, பலம் வாய்ந்த ஒன்றுபட்ட சமுதாயம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏதுவாக ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

வரக்கூடிய 2024-ன் தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் வருகிறது. தேர்தல் காலங்களில் மக்களின், சமுதாயங்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்வதை நாம் விரும்புவதில்லை, ஆனால் அப்படி நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. சமுதாயத்தை துண்டாடக்கூடிய இந்த விஷயங்களில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும். ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, அதை நாம் அவசியம் செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் முன்னேற்றம் குறித்து சிந்தித்து நாம் வாக்களிக்க வேண்டும்.

2025 – 2026 வருடம், சங்கம் துவங்கிய 100 வருடம் முடிவடைந்த பிறகு வரும் ஆண்டாகும், மேலே சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் மனதில் நிறுத்தி சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் அப்போது தங்கள் முன்னெடுப்புகளை செய்வார்கள். அவற்றை நடைமுறைக்கும் கொண்டு வருவார்கள். சமுதாயத்தின் சொல் மற்றும் நடத்தை  தேசத்தை வலிமையாக்கி, இந்த சமுதாயம் நம்முடையது என்ற எண்ணம் மேம்பட செய்ய வேண்டும். கோவில், தண்ணீர், சுடுகாடு போன்றவற்றில் பாகுபாடு இல்லாமல் இருக்கும் நிலை வரவேண்டும். குடும்பத்தில் எல்லா உறுப்பினர்களுக்குள் நல்ல கருத்து பரிமாற்றங்கள், நாகரீகமான நடத்தை போன்றவை மூலம் சமுதாயத்திற்கும்  உதாரணமாக திகழ வேண்டும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்த்து, வீட்டிலும், சுற்றுப்புறத்திலும், பசுமை வளர்த்து வாழ பழகவும் வேண்டும். சுதேசி வாழ்வியலில் சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை வளர வேண்டும். தேவையற்ற செலவு, ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட, நாட்டின் பணம், நாட்டில் உபயோகப்பட வேண்டும். அதனால் சுதேசி பயன்பாடு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். சட்டம் ஒழுங்கு, குடிமக்கள் சட்டங்களை மதித்தல், சமுதாயத்தில் பரஸ்பர நல்லிணக்கம், ஒருங்கிணைப்பு எல்லா இடத்திலும் வெளிப்பட வேண்டும். மேற்கூறிய 5 விஷயங்களை அனைவரும் விரும்புவர். ஆனால் சிறிய சிறிய விஷயங்களில் தொடங்கி அவற்றின் தொடர் பயிற்சியின் மூலம் அவற்றை நம்முடைய சுவபாவங்களாக மாற்றுவதற்கு முயற்சி அவசியம் தேவை. சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் வரும் நாட்களில் சமுதாயத்தின் ஏழை எளிய சொந்தங்களுக்கு சேவை செய்வதோடு சேர்த்து, மேற்கூறிய ஐந்து விதமான வழிமுறைகளை கடைபிடித்து, சமுதாயத்தையும் அவற்றின் பங்களிப்பாளராகவும் ஆக்க முயற்சி செய்ய வேண்டும், செய்வார்கள். சமுதாய நன்மைக்காக ஆட்சியாளர்கள், அரசாங்கம் மற்றும் சமூக நற்சிந்தனையாளர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அல்லது செய்ய நினைத்தாலும், அவற்றில் சங்க ஸ்வயம்சேவகர்களின் பங்களிப்பு தினமும் இருந்துக் கொண்டுதான் இருக்கும்.

சமுதாயத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு அனைத்து வகையிலும் தன்னலமற்ற சேவை, உழைப்பு, மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள், மக்களை நோக்கிய அரசாங்கம் ஆகியவை தங்கள் தங்கள் நிலையிலிருந்து ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் போது தான், தேசத்தின் பலம், பெருமை முழுமை பெறும். வலிமையையும், பெருமையும் ஒரு தேசம், அத்துடன் பாரதம் போன்ற சனாதனம் (அழியாத்தன்மை) மற்றும் அனைவரையும் குடும்பமாக நினைக்கும் பங்கு, இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்லக்கூடிய, பொய்யில் இருந்து உண்மையை நோக்கி செல்லும், அழிவிலிருந்து அழியாமையை நோக்கி அழைத்து செல்லும் கலாச்சாரத்தை பின்பற்றுமேயானால், அப்போது அந்த  நாடு உலகத்தில் இழந்து போன அமைதியை மீட்டெடுக்கவும், அமைதியும், மகிழ்ச்சியும் தரக்கூடியதாகவும் இருக்கும். உலகிற்கு புத்துயிர் கொடுப்பது தான், இன்றைய சூழலில்  அழிவில்லா நமது பாரதம் தேசத்தின் பொறுப்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top