விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 22, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்ற ஆண்டு இந்த அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு மாநில அரசு தடை விதித்ததை அடுத்து உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைதியான முறையில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடந்து முடிந்தன. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு, அனுமதி வழங்கக்கோரி ஆர்எஸ்எஸ் மாவட்ட அமைப்புகள் மனு அளித்தும் மாவட்ட நிர்வாகிகள் அனுமதி வழங்கவில்லை.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ‘நிபந்தனை அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இதேபோன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி, அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுகளின்படி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு திமுக அரசின் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, தனித்தனியாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
இது பற்றி ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் ரபுமனோகர் கூறியதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு திட்டமிட்டு அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் மனு அளித்தோம். ஆனால் வேண்டுமென்றே போலீசார் அனுமதி வழங்கவில்லை.
அதன் காரணமாக உள்துறை செயலாளர், டிஜிபி முதல் அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். அதற்காக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் ஒவ்வொரு ஆண்டும் அணிவகுப்பு ஊர்வலத்தை தடை செய்யும் வழக்கத்தை இரண்டு கழகங்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. ஆபத்தான இந்த அணுகுமுறைக்கு முடிவு கட்ட வேண்டிய பெரிய பொறுப்பு, இந்துக்களுக்கு இருக்கிறது என்கிறார்கள் இந்துத்துவ ஆதரவாளர்கள்..