பாரா ஆசியா விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த பாரதத்தின் வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளார்.
சீனா, ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் நமது பாரத வீரர்கள், வீராங்கனைகள் திறமைகளை வெளிப்படுத்தி வரலாற்றில் முதல் முறையாக 100 பதக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளனர்.
இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தமாக 102 பதக்கங்களை வென்று நம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தேசத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளனர்.
இந்த நிலையில், வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 100 பதக்கங்கள் பெற்றுள்ள இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வீரர்களின் கடின உழைப்பு, மன உறுதியால் கிடைத்துள்ள இந்த வெற்றி ஈடு இணையற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது.
இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் திறமை, கடின உழைப்பு, உறுதி ஆகியவையே காரணம். இது குறிப்பிடத்தக்க மைல்கல். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவூட்டுகின்றன என்று பாராட்டியுள்ளார்.