கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை மீட்க சட்டப் போராட்டம் தொடரும்!

கத்தார் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை மீட்பதற்கான மத்திய அரசின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் அஜய் அலோக் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியர்கள், அந்நாட்டின்  கடற்படை திட்டங்களை உளவு பார்த்து இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு மரண தண்டனை விதித்து (அக்டோபர் 26) தீர்ப்பளிக்கப்பட்டது.

இது பற்றி கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியர்கள் 8 பேருக்கு கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சிசியளிக்கிறது. தீர்ப்பு விவரங்களை ஆய்வு செய்து, அவர்களை மீட்க அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று (அக்டோபர் 27) செய்தியாளர்களிடம் பேசிய தேசிய செய்தி தொடர்பாளர் அஜய் அலோக்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இதுபோன்ற நிகழ்வுகளும் ஏற்படுமா என்ற வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்த இருக்கிறோம். சர்வதேச நீதிமன்றம் வரை நாம் நாட முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசு சரியான முடிவை எடுக்கும். தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டு, பாரதத்திற்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top