ஆர்எஸ்எஸ் தொண்டர்களால் ஹரியேட்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஸ்ரீரங்க ஹரி ஜி தனது 93வது வயதில் இன்று அதிகாலை (அக்டோபர் 29) பாரத மாதாவின் திருவடிகளை அடைந்தார்.
ஸ்ரீ ரங்கஹரி ஜி மிகச் சிறந்த முறையில் ஹிந்து சித்தாந்தங்களை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர்.
கேரளாவில் காலஞ்சென்ற ஸ்ரீ பி.பரமேஸ்வரன் ஜி அவர்களுடன் இணைந்து கம்யூனிஸ கோட்பாட்டினை கொள்கை அடிப்படையில் எதிர்த்துப் போராடியவர்களில் முக்கியமான ஒருவர். சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர். எண்ணற்ற நூல்கள் எழுதியவர். மலையாள இதழலான கேசரியில் தொடர்ந்து பல வருடங்களாக வரலாறு, சிந்தாந்தம், சமூகம் என முக்கிய விஷயங்கள் குறித்து எழுதி வந்தவர்.
பன்மொழிப் புலமை வாய்ந்தவர். மலையாளம், தமிழ், ஹிந்தி, கொங்கணி, சம்ஸ்க்ருதம் & ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவர்.
70 வருடங்கள் ப்ரசாரக் வாழ்க்கை, கேரளாவில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். கேரள ப்ராந்த ப்ரசாரக் (மாநில அமைப்பாளர்) பின்னர் அகில பாரத பௌதிக் ப்ரமுக் என பல பொறுப்புக்களில் பணியாற்றியவர்.
ஆர் எஸ் எஸ் பேரியக்கத்தின் இரண்டாவது அகில பாரத தலைவர் ஸ்ரீ குருஜி அவர்களின் நூற்றாண்டினையொற்றி ஸ்ரீ குருஜியின் படைப்புகள் அனைத்தையும் ஒன்று திரட்டி வெளிக்கொண்டு வந்ததில் ஸ்ரீ ரங்க ஹரிஜியின் பங்களிப்பு அளவிட முடியாதது.
அண்மைக் காலம் வரை தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றி கார்யகர்த்தர்களுக்கு வழி காட்டி வந்தவர்.
ஸ்ரீ ரங்க ஹரியின் மறைவுக்கு ஒரே நாடு இதழ் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஓம் சாந்தி…சாந்தி.. சாந்தி…!