மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (அக்டோபர் 29) வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரியை பிரதமர் பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்;
இலக்கியத்தின் மூலம் இந்தியாவை இணைக்கும் முயற்சி பாராட்டுக்குரியது என்று பிரதமர் என்னைப் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 16 ஆண்டுகால தவத்திற்கு கிடைத்த பயனாக இதை நான் கருதுகிறேன்.
இந்த நூல் பிரதமரின் கவனத்திற்கு செல்ல வேண்டுமென்று நினைத்தேன்; இதை அவரது கவனத்திற்கு யாரோ கொண்டு சென்றிருக்கிறார்கள்; பிரதமர் இந்த நூலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பாராட்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவை இந்தியர்களுக்கே அறிமுகப்படுத்தும் நூல் (இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு) இது; இந்த நூலுக்காக 16 ஆண்டுகள் இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறேன். ஏராளமான எழுத்தாளர்களை நேரில் கண்டு பேட்டி எடுத்திருக்கிறேன்; தகவல் தொழில்நுட்பம் எதுவும் இல்லாத காலகட்டத்தில் இந்தியா முழுக்க தன்னந்தனியாக பயணம் செய்து மொத்த தகவல்களையும் திரட்டி நூலை கொடுத்திருக்கிறேன்.
இனிமேல் எனக்கு எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு 81 வயதாகி விட்டது, இனிமேல் அங்குமிங்கும் சென்று ஆய்வு செய்து களப்பணியாற்றி நூல் எழுத சக்தியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.