இளைஞர்கள் ஒன்றிணைந்தால் இலக்கை அடைய முடியும்: அமிர்த கலச யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

“என் மண் என் தேசம்” இயக்கத்தின் அமிர்த கலச யாத்திரையின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான இலக்குகளை இளைஞர்கள் ஒன்றிணைந்தால் அடைய முடியும் எனக் கூறினார்.

கடந்த சுதந்திர தின விழா உரையின்போது பிரதரம் மோடி, ‘‘நமது தேசத்திற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை பெருமை சேர்க்கின்ற வகையில் ‘‘என் மண், என் தேசம்’’ என்ற இயக்கம் தொடங்கப்படும். இதற்காக நாடு முழுவதும் அமிர்த கலச யாத்திரை தொடங்கப்படும்.

இந்த யாத்திரையின்போது, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விதைகள் மற்றும் மண் சேகரிக்கப்பட்டு கலசங்களில் நிரப்பப்பட்டு, டெல்லிக்கு கொண்டு வரப்படும். அந்த மண் தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே இருக்கும் பூங்காவில் கொட்டப்படும். அங்கு மரக்கன்றுகள் நடப்படும்” என்று கூறியிருந்தார்.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு கடந்த 29-ம் தேதி டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. இது இன்று (அக்டோபர் 31) டெல்லி கடமை பாதையில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கொட்டப்பட்டது. அந்த மண்ணை வணங்கிய மோடி, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டார்.

பின்னர், ‘அமிர்த வாடிகா’ மற்றும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்சவ் ஸ்மாரக்’ ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, “அமிர்த மஹோத்சவ் நினைவுச் சின்னம் வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பற்றிச் சொல்லும்” என்றார்.

மேலும், ‘மேரா யுவ பாரத் போர்ட்டலை’ தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “21-ம் நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சியில் ‘மேரா பாரத் யுவா’ அமைப்பு பெரும் பங்கு வகிக்கும். இளைஞர்கள் ஒன்றிணைந்தால் ஒவ்வொரு இலக்கையும் எப்படி அடைய முடியும் என்பதற்கு “என் மண் என் தேசம்” ஒரு எடுத்துக்காட்டு.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த “என் மண் என் தேசம்” நிகழ்ச்சியில் தண்டி யாத்திரைக்கு திரண்டது போல மக்கள் திரண்டுள்ளனர். இது புதிய சரித்திரம் படைக்கும்” என்றார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top