தமிழ் திரை உலகில் குணச்சித்ர நடிகையாக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மாநில பாஜகவின் கலை இலக்கியப் பிரிவில் பொறுப்பில் உள்ளார்.
சென்னை, கெரும்பாக்கம் பகுதியில் நேற்று (நவம்பர் 3) சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் சிலர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியும், ஜன்னல் மீது ஏறியும் பயணம் செய்தனர். இதை அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த ரஞ்சனா பார்த்து, பேருந்தை நிறுத்தினார். பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் இதுபற்றி கேட்க மாட்டீங்களா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அதில் பயணித்த மாணவர்களை இறக்கிவிட்டு அவர்களை அதட்டினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அவரது சேவைக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் திமுகவில் உள்ள சிலரின் தூண்டுதலால், பேருந்து ஓட்டுனர் சரவணன் அளித்த புகாரில் இன்று (நவம்பர் 4) காலை ரஞ்சனாவை அவரது வீட்டிற்கே சென்று போலீசார் கைது செய்தனர். மாணவர்களை தாக்கியது, ஓட்டுனர், நடத்துனரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்வதை, போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எதையுமே செய்யவில்லை.
படிக்கட்டில் பயணம் செய்வதே தவறு. அதிலும் இதில் பயணித்த மாணவர்கள் பேருந்தின் ஜன்னல் மீதெல்லாம் ஏறி அட்டகாசம் செய்துள்ளனர். நேற்று ஏதேனும் விபரீதம் நடந்து இருந்தால் என்னவாகி இருக்கும். அந்த சூழலில் மாணவர்களை நல்வழிப்படுத்தியதற்காக ரஞ்சனாவை கைது செய்ததற்கு சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் பா.ஜ.வை சேர்ந்தவர் என்பதால் தான் அரசு அவரை பழிவாங்கும் வகையில் செயல்படுகிறது என்று பாமர மக்கள் கூட குற்றம் சாட்டுகின்றனர்.