காசா கிராண்ட் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் இருப்பது தெரியவந்துள்ளது. ரூ.4 கோடி பணம் சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 90க்கும் மேற்பட்ட இடங்களில் நவம்பர் 3ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் இருக்கும் காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது. தலைமை அலுவலகத்தில் மட்டும் பத்துக்கும் அதிகமான அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
கோவையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அங்குள்ள காசா கிராண்ட் இயக்குநர் செந்தில் குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.600 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ரூ.4 கோடி பணமும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மூலம் ரூ.250 கோடி கணக்கில்
வராதது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 4 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த பணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு சோதனைக்கு பின்னர் எ.வ.வேலு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சம்பாதித்துள்ளார் என்பது தெரிய வரும்.
பொதுவாக காசா கிராண்ட் கட்டடங்கள் அனைத்துமே, நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அல்லது ஏதோ ஒரு வகையில் அந்த இடங்களுக்கு அனுமதி பெற்று, கட்டப்பட்டதாக தான் இருக்கும். சென்னை வாழ் நகரில் உள்ள பலரும், எப்படி காசா கிராண்டுக்கு அந்த மாதிரி இடங்களில் அனுமதி கிடைக்கிறது, இது பற்றி ஒரு ஆய்வு வேண்டும் என்று பல காலமாக கூறி வருகிறார். இது பற்றிய விசாரணையை வருமான வரி அதிகாரிகள் செய்ய முடியாது என்பதால், காசா கிராண்ட் விஷயத்தில் அமலாக்கத்துறை களமிறங்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.