சேறு, சகதியான இடத்தில் பட்டாசு கடைகள் நடத்த அனுமதி வழங்கியதை கண்டித்து, அதன் கடைக்காரர்கள், எம்.எல்.ஏ., தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
ஆத்தூர், நரசிங்கபுரம் நகர், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மனு அளித்தனர். அவர்களுக்கு ஆத்தூர், கோட்டை, உப்பு ஓடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு புதர் மண்டி மழை நீர் தேங்கி சேறு சகதியாக காணப்பட்டது. இதனால் வருவாய்த்துறையினர் நேற்று (நவம்பர் 8) கல்லாநத்தம் ஏரியில் இருந்து டிப்பர் லாரிகளில் மண் கொண்டு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தாசில்தார் வெங்கடேசன் வந்தனர். அவர்களை 20க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
அப்பபோது கடை உரிமையாளர்கள், போக்குவரத்து இல்லாத இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. புதர் அகற்றும்போது பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிக்கள் வருகின்றன. பாதுகாப்பற்ற இடத்தில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் பல லட்சம் ரூபாய் பட்டாசுகள் விற்க முடியாத நிலைக்கு மாவட்ட நிர்வாகம் தள்ளியுள்ளது என்றனர்.
அதே போன்று ஓமலூர் வட்டாரத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க 44 பேர் அனுமதி கேட்டுள்ளனர். அவர்களுக்கு ஓமலூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் படையாப்பா நகர் திறந்த வெளிப்பகுதியில் வருவாய்த்துறையினர் இடம் தேர்வு செய்தனர். அங்கு சேறு, சகதியாக இருந்ததால் அவற்றை சீரமைக்கும் பணி நடந்தது.
இது பற்றி பட்டாசு கடைக்கு விண்ணப்பித்தவர்கள் கூறுகையில், ‘கடை அமைக்க இதுவரை வருவாய்த்துறை இடத்தை ஒப்படைக்கவில்லை. மின்சார வசதி ஏற்படுத்தவில்லை. தீபாவளிக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் பல லட்சம் முதலீடு செய்துள்ள வியாபாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றனர்.