கடந்த 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்தாண்டு ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சாவில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். இந்த வகையில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக, தனது தீபாவளியை ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடினார். அப்போது தன்னுடன் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் இனிப்பு ஊட்டி மகிழ்வித்தார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹிமாச்சல பிரதேசம் சென்றார். ஒவ்வொரு ஆண்டும் காஷ்சீர், சீன எல்லை, பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுடன் கொண்டாடும் பிரதமர் மோடி, தீபாவளி அன்று ஹிமாசல் பிரதேசம், லெப்சாவிற்கு சென்றடைந்தார். பிரதமர் மோடியை ராணுவ மேஜர், கமாண்டர்கள் வரவேற்றனர். அங்கு தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர், இராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை தனது கைகளினால் ஊட்டி விட்டார்.
அதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நமது ஆயுதப்படைகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எந்த சவாலையும் சந்திக்க நீங்கள் தயாராக இருக்கின்றனர். அனைத்திலும் நமது வீரர்கள் முன்னிலையில் வகிக்கின்றனர். ராணுவ வீரர்களுக்கு நாடு கடமைப்பட்டு உள்ளது.
தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு பயணிக்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ஒரு லட்சம் கோடியை தாண்டி உள்ளது. 140 கோடி மக்கள் உங்களுடன் இருக்கின்றனர். ப்ஒவ்வொரு இந்தியரும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுகிறேன். இங்கிருந்து மக்களுக்கு வாழ்த்து சொல்வது மிக சிறப்பானது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ராமர் எங்கிருக்கிறாரோ அந்த இடம் தான் அயோத்தி என கூறுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்திய ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அந்த இடம் தான் எனக்கு அயோத்தி.
உலகம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது போன்ற சூழ்நிலைகளில் இந்தியாவின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக முக்கியம். நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். அதில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. எல்லையில் வீரர்கள் இமயமலையை போல் உறுதியாக நிற்பதால் நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கூறியிருப்பதாவது:
ஹிமாச்சல பிரதேசத்தின் லெப்சாவில், துணிச்சல் மிக்க பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுவது ஆழ்ந்த உணர்ச்சியும், பெருமையும் கொண்ட அனுபவம் ஆக உள்ளது. தங்கள் குடும்பங்களை விட்டு விலகி நமது நாட்டை பாதுகாக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக நமது வாழ்வில் ஒளியேற்றுகின்றனர் எனக்கூறியுள்ளார்.
நமது பாதுகாப்பு படையினரின் தைரியம் யாராலும் அசைக்க முடியாது. மிகவும் கடினமான நிலப்பரப்புகளில் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகி, செய்யும் தியாகமும், அர்ப்பணிப்பும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது. தைரியம் மற்றும் துணிச்சலின் உருவகமாக இருக்கும் இந்த ஹீரோக்களுக்கு இந்தியா எப்போதும் நன்றியுடன் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.