தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பட்டாசு, புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. முன்பு எல்லாம் தீபாவளி என்றால் பொருட்கள் பலவும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சீனப்பொருட்களை தவிர்த்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று 2020-ம் ஆண்டு முதல் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வர்த்தகர்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்திய வர்த்தகர்கள், சீன தயாரிப்புகளுக்குப் பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள் என்றும் இதனால் இந்தத் தீபாவளி வர்த்தகத்தில் சீனாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ரூ.1 லட்சம் கோடி வரை சீனாவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள 20 முக்கிய நகரங்களில் வர்த்தகர்கள் சீன தயாரிப்புகளை வாங்குவதை குறைத்துள்ளனர். குறிப்பாக, தீபாவளி தொடர்புடைய பொருட்களை சீனாவிலிருந்து வாங்குவதை வர்த்தகர்கள் தவிர்த்துள்ளனர் என்று அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.