திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் அரோகரா பக்தி முழக்கத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கனத்தில்அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெற உள்ளது. நவம்பர் 22ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23ம் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். முக்கிய விழாவான மகா தீபம் நவம்பர் 26-ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவை காண வெளியூர் மற்றும் உள்ளூரை சேர்ந்த சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.