பாரதத்தை உலகின் குருவாக மாற்றுவதே ஆர்.எஸ்.எஸ்., நோக்கம் என மாநில அமைப்பாளர் ஆறுமுகம் திருப்பூரில் பேசினார்.
விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு நடத்தப்படும். அந்தப் பேரணிக்கு திமுக அரசு அனுமதி மறுத்தது. உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்னரும் போலீஸ் அனுமதி தராததால் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
கட்டுப்பாடுகளுடன் பேரணியை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் (நவம்பர் 19) சென்னையில் மூன்று இடங்கள் உட்பட தமிழகத்தில் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம் திருப்பூரில் நடந்தது. சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்தபடி மிடுக்காக நடந்தனர்.
செல்லம் நகர் பிரிவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள் ஆசி வழங்கி பேசினார். திருப்பூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் முன்னாள் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார்.
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழக மாநில அமைப்பாளர் ஆறுமுகம் பேசியதாவது:
சனாதனம் பற்றி தமிழகத்தில் சர்ச்சை பேச்சுகள் எழுந்துள்ளன. தீயனவற்றையும் சரி செய்து இந்த தேசத்துக்கு பயனுள்ளதாக மாற்ற வேண்டும்; இதுவே சனாதனம். பல ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் சனாதனத்தை பின்பற்றி வருகின்றனர்.
இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் சனாதனம் நிலைத்திருக்கும். இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து இந்த நாட்டை உலகின் குருவாக மாற்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ்., தோற்று விக்கப்பட்டது.
பொருளாதாரம், விஞ்ஞானம் என பல்வேறு துறைகளில் நம் நாடு வளர்ந்த நாடாக மாறியுள்ளது. நாம் எப்போதும் இந்துவாகவே இருக்க வேண்டும். இந்திய தயாரிப்பு பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பண்பாடு, கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் கட்டாயம் வளர்க்க வேண்டும்.
வரும் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. யாரும் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்; நல்லவர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள்.
ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 22ல், ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அன்றைய தினம் இந்துக்கள் அனைவரும் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்; 108 முறை ராம நாமம் சொல்ல வேண்டும்.
இம்முறை நமக்கு இரண்டு கார்த்திகை தீபம். வரும் 26ம் தேதி கார்த்திகை தீபம்; அதேபோல, ஜனவரி 22ல் ராமர் பிரதிஷ்டை நாளிலும் இரவு நேரம் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.