மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், ரத்லாம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா இஸ்லாமிய முதியவர் ஒருவரிடம் செருப்பால் அடி வாங்கி ஆசிர்வாதம் பெற்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. மொத்தம் உள்ள 230 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், ரத்லாம் மாவட்டத்தில் உள்ள ரத்லாம் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் சேட்டன் காஷ்யப்பை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா மோவ் சாலையில் உள்ள ஒரு தர்காவில் வசிக்கும் பக்கீர் என்ற இஸ்லாமிய முதியவரிடம் புது செருப்புகளை கொடுத்து அடி வாங்கி ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.
அப்பகுதியில் வசிப்பவர்களால் பக்கீரிடம் செருப்பால் அடி வாங்கினால் நினைத்தது நடக்கும் என நம்புவதாகவும், அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பக்கீரிடம் காங்கிரஸ் வேட்பாளர் பராஸ் சக்லேச்சா செருப்பு கொடுத்து அதில் அடி வாங்கி உள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது பற்றிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.