இந்தியப் பொருளாதாரம் முதன்முறையாக 4 டிரில்லியன் மதிப்பை கடந்து சரித்திர சாதனை படைத்துள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை பொறுத்து அதன் பொருளாதாரத்தின் நிலை குறியிடப்படும்.
வரும், 2026 – 2027ல் நம் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் அதாவது, 416 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
தற்போது உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் நம் நாடு 5வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு முன்னேறவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில் நம் நாட்டின் பொருளாதாரம் முதல் முறையாக 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதாவது 333 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்தியாவின் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியது குறித்த வைரலான சமூக ஊடகத்தின் செய்தி குறித்து நிதி அமைச்சகம் மற்றும் தேசிய புள்ளியியல் அலுவலகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. வரலாற்று சாதனை குறித்து பல மூத்த பாஜக தலைவர்கள் உட்பட சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்தியாவின் உலகளாவிய முன்னிலையில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் என்று ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் ‘இந்தியப் பொருளாதாரம் 4 டிரில்லியன் டாலர்களை கடந்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது, இது நமது உலகளாவிய இருப்பில் குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை இந்தியாவை முன் எப்போதும் இல்லாத உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது,” என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாஸ் இதே புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, ‘‘இயக்கமான, தொலைநோக்கு தலைமையின் வெற்றி இது. நமது தேசம் 4 டிரில்லியன் பொருளாதார மைல் கல்லைத் தாண்டியதற்கு எனது சக இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கு அதிக சக்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சக்தி பெருகட்டும் ’ என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வெளியிட்ட பதிவில், ‘‘பொருளாதாரம் முதல் முறையாக 4 டிரில்லியன் டாலர்களைத் தொட்டதற்கும், முன்னேறிச் செல்வதற்கும் வாழ்த்துகள். 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி பிரதமர் மோடி அரசு நம்மை இட்டு செல்லும், என்று கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திரப் பிரதேசத் தலைவர் டி.புரந்தேஸ்வரி வெளியிட்டுள்ள பதிவில்; பாரதம் 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்ததற்கு வாழ்த்துகள்! கடந்த 9.5 ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திரமோடி ஜி அரசாங்கம் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி சீர்திருத்தங்களால் இந்த அற்புதமான சாதனை சாத்தியமாகியுள்ளது’’ என்றார்.
2 ஆண்டுகளில் 3வது பெரிய பொருளாதாரம்: இந்தியாவுக்கு தொழில் அதிபர் அதானி வாழ்த்து:
இந்தியாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் என்றார்.
‘‘வாழ்த்துக்கள், இந்தியா. இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், ஜப்பானை 4.4 டிரில்லியன் மற்றும் ஜெர்மனியை 4.3 டிரில்லியன் முந்தி உலக பொருளாதார அடிப்படையில் இந்தியா பெரிய நாடாக உருவாகிறது. மூவர்ண எழுச்சி தொடர்கிறது! ஜெய் ஹிந்த், என தனது ‘‘எக்ஸ் பதிவில் அதானி குறிப்பிட்டுள்ளார்.