ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே திருவந்தார் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 96 மாணவர்கள் படிக்கின்றனர்.
நேற்று காலை 10 மணியளவில் பள்ளி சமையலர் கண்ணகி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்து உணவு சமைத்துள்ளார். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. குடிநீர் தொட்டி தண்ணீரில் காய்கறிகளை சுத்தம் செய்த போதும், அதிக வாடை வீசியதால் சந்தேகம் அடைந்தார். தண்ணீர் தொட்டியை சோதித்த போது, மஞ்சள் நிறத்தில் ஏதோ மிதந்ததை பார்த்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் வந்து பார்த்த போது குடிநீரில் மனித மலம் மிதப்பது தெரியவந்துள்ளது. தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு சமைத்த உணவையும் புதைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி., சுதாகரன், ஆர்.டி.ஓ., ரம்யா மற்றும் பள்ளி கல்வித் துறை அலுவலர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக ஆட்சியர் கலைச்செல்வி கூறும்போது:
குடிநீர் தொட்டியில் அழுகிய, ஓட்டை விழுந்த ஒரு முட்டையை காகம் தூக்கி வந்து போட்டிருக்கலாம் என தெரிகிறது.
அந்த அழுகிய முட்டையின் நாற்றம் சமையல் மற்றும் சத்துணவு பணியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. புதியதாக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படும். என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி குடிநீர் தொட்டி இன்று (நவம்பர் 22) அகற்றப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் சொல்வதை கிராம மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. மனித மலம் கலந்திருப்பதால்தான் வேக, வேகமாக தண்ணீரை வெளியேற்றிவிட்டு அந்த குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தடயத்தை அழிக்கப்பட்டுள்ளதாகவே நெட்டிசன்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்து ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்டது. இன்றுவரை குற்றவாளிகளை இந்த விடியாத அரசு கைது செய்யவில்லை.
அதன் பின்னர் ஒவ்வொரு அரசுப்பள்ளிகளிலும் மனித மலம் கலக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பனைகுளம் அரசு நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது. அந்த சம்பவத்துக்கு இன்றுவரை யாரையும் கைது செய்யவில்லை. குற்றவாளிகளுக்கு இந்த அரசு மீது பயம் இல்லை என்பதே காட்டுகிறது. வேங்கைவயல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இது போன்ற குற்றச்சம்பவம் செய்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருக்கும் என்பதே உண்மை.