மக்களின் தலைவன் ‘பிரதமர் மோடி’

– மகர சடகோபன் 

பாலில் சர்க்கரை உட்கலந்து, கலந்த பிறகு சர்க்கரையைப் பிரிக்க முடியாது. பால் இப்பொழுது சர்க்கரை கலந்த பால். பாலின் மதிப்புக் கூட்டித் தித்திக்கும் பால், சுவை மிகுந்த பாலாகக் கருதப்படுகிறது. பாத்திரத்தின் கடைசி துளிப் பால் வரை அதன் தித்திக்கும் தன்மை இருக்கும்.

மக்கள் தலைவன் என்பவன் மக்களிடம் உட்கலந்து, பிரிக்கமுடியாத அளவுக்கு உட்கலந்து, அவர்களை ஊக்குவித்து, அவர்களின் மதிப்பை அதிகரித்து, அவர்களுக்கு எக்காலத்திலும் துணை நிற்பதுதான் அழகு. மக்களின் கடைசி விளிம்பு வரை மதிப்பைக் கூட்டுவது தான் தலைவனின் தலையாய கடமையாகும்.

நமது பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் மக்களுடன் கலந்து, ஊக்குவிப்பதில் தலைசிறந்தவர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்களையும், வீராங்கனைகளையும் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்திகள் மூலம் ஊக்குவித்தார். அவர்கள் நாடு திரும்பியவுடன் அவர்களை டெல்லியில் சந்தித்து அனுபவங்களைக் கேட்டு உரையாடினார். அதன் விளைவு என்பது இந்திய அணிக்கு ஆசிய விளையாட்டில் முதன்முறையாக அதிக பதக்கங்களை வெல்ல முடிந்தது.

கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு, இந்திய அணி தோற்றாலும், அவர்களை ஊக்குவித்து, அவர்களுடைய சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டினார். வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமியை தோளில் சாய்த்து ஆறுதல் அளித்தார். 140 கோடி மக்களின் சார்பாகப் பாராட்டுதலையும் ஆறுதலையும் அளித்தார்.

மேலும் டிவிட்டரில் எந்த சூழ்நிலையிலும் இந்தியப் பக்கம் நிற்பேன் என்று கூறியிருந்தார். சரியான தலைமைக்கான அடையாளம் இது.

இதையெல்லாம் மறைத்து சில விஷமிகள் சில விஷம பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். உண்மைக்கு புறம்பாக என்பது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

மோடிஜி பிரதமர் ஆன வருடம் 2014ல் தொடங்கி இந்த வருடம் வரை, ஒவ்வொரு தீபாவளியையும், குடும்பத்தை விட்டுப் பிரிந்து எல்லைகளில் நமக்காக எல்லையைக் காக்கும் எல்லை சாமிகளுடன் ஒன்று சேர்ந்து, இனிப்பு வழங்கி, கேளிக்கைகளுடன் கொண்டாடி வருகிறார். இதுவும் சரியான தலைமைக்கான அடையாளம்.

சீனப்பெருஞ்சுவர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களினால் பல்வேறு இடங்களில் 2700 ஆண்டு முதல் 1644 வரை, 21196.18 கி.மீ. நீளம் கட்டப்பட்டது. எல்லைகளைப் பாதுகாக்கச் சுவர்களை எழுப்பினார்கள். சீனப்பெருஞ்சுவர் எழுப்பப்படும்  ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்து அடுத்து வந்த மன்னர்கள் மக்கள் நலனில் கவனம் செலுத்துவதை விட்டு சுவர் எழுப்பிப் பாதுகாக்க நினைத்தனர். மக்கள் ஒத்துழையாமையால் எதிரிகள் மீண்டும் மீண்டும் தாக்கினார்கள்.

பெருஞ்சுவரினால், சிறந்த முறைமையினால் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது, மக்களினால் மட்டுமே அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியும்  என்பது சீனப்பெருஞ்சுவர் கற்றுத்தந்த பாடம். தலைவன் மக்களுடன் உட்கலக்கவில்லையென்றால் எந்தவொரு கட்டமைப்பினாலும் ஒன்றும் செய்யமுடியாது என்பதனை சீனப்பெருஞ்சுவர் உணர்த்துகிறது.

இதை உணர்ந்து உணர்வுப் பூர்வமாக மக்களை அணுகி வருகிறார் நமது பிரதமர் மோடி ஜி.  ஒரு நாட்டின் செல்வம் அதன் மக்கள்  என்பதனை உணர்ந்தவர் நம் பிரதமர்.

கொரானா காலகட்டத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று, நாட்டின் தலைவன் என்ற முறையில் விஞ்ஞானிகளுடன் உரையாடி, அவர்கள் பக்கம் நின்று, ஆதரவுகளை அளித்து, இரண்டு தடுப்பு மருந்துகளைப் பாரதத்தில் தயாரித்து, பாரத மக்களையும், உலக மக்களையும் காப்பாற்றினார். தலைவனாக நின்று வழிகாட்டியதன் உந்துதல் தான், கொரானா தடுப்பு மருந்துகளின் உள்ளூர் உற்பத்தி என்பது. இல்லையென்றால் பாரதம் பாரை நோக்கிப் பார்த்து இருக்க வேண்டி வரும். மக்களைக் காப்பாற்றுவது என்பது கடினமான காரியமாக ஆகி இருக்கும்.

சந்திரயான் 1 2003 ஆண்டு வாஜ்பாய் அரசாங்க ஒப்புதலுக்குப் பிறகு, மன்மோகன் சிங் அரசாங்கத்தால் 2008ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. 2009 வரை வேலை செய்தபிறகு தோல்வி அடைந்தது.

அதற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டது. உடனே தோல்வியைச் சந்தித்தது. அப்பொழுது பாரதப்பிரதமர்  உடனிருந்து, விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தினார். தோல்வியைச் சந்தித்த பிறகு இஸ்ரோ தலைவரைத் தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, விஞ்ஞானிகளின் பக்கம் நிற்கிறேன் என்று கூறியவர்.

சொல்வது மட்டுமல்லாமல் செயலிலும் அவர்களை ஊக்குவித்து, நான்கே ஆண்டுகளில் சந்திரயான்3 விண்ணில் ஏவப்பட்டு பாரத விஞ்ஞானிகளின் சாதனைகளை உலகுக்கு உணர்த்திய உன்னத தலைவன். அன்று வெளிநாட்டிலிருந்தாலும், வெப் சந்திப்பில் தொடர்பு கொண்டு ஊக்குவித்தார்.

வெளிநாட்டிலிருந்து பாரதம் வந்தவுடன் முதலில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகம் சென்று, விஞ்ஞானிகளைச் சந்தித்துப் பாராட்டினார். அதுவே அவரது முதல் கடமையாக இருந்தது, அதை நாம் கண்ணால் பார்த்தோம். மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவன் என்று நிரூபித்தவர் அவர். 

சந்திரயான் தோல்வியிலும் வெற்றியிலும் நேராகச் சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து ஊக்குவித்தார். பாராட்டினார். அவர்களுடன் உட்கலந்து அவர்கள் பக்கம் எக்காலத்திலும் துணை நிற்பேன் என்ற உறுதியைத் தலைவனாக மீண்டும் மீண்டும் உரைத்தார்.

பாலில் சர்க்கரையைக் கலந்து மதிப்பைக் கூட்டுவதை விட்டு, சில விஷமிகள் விஷம பிரச்சாரங்களால், பாலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து பாலை வீணாக்குவது போல் மக்களின் மனதை வீணாக்குகிறார்கள்.

இவர்களை நாம் அடையாளம் காண வேண்டும், விஷமிகளுக்குத் தக்க தருணத்தில் நல்லவர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதுவே விழிப்புணர்வு பெற்ற தேசத்தின் அடையாளம்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top