மகிழ்ச்சியையும், அமைதியையும் உலகம் பெற பாரதம் வழிகாட்டும் என மக்கள் நம்புகின்றனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் ‘உலக ஹிந்து காங்கிரஸ் 2023’ மாநாடு நவம்பர் 24 முதல் நவம்பர் 26 வரை நடக்கிறது. இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
உலகம் ஒரே குடும்பம். ஆனால் பொருள், மகிழ்ச்சிக்கான அனைத்து வழிகளையும் கையகப்படுத்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு ஆதிக்கம் செலுத்த முயற்சி மேற்கொள்கின்றனர். இதன் பிரச்சினைகளை நாம் அனுபவித்து வருகிறோம்.
இன்றைய உலகம் தடுமாறி கொண்டு உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக மகிழ்ச்சி, பேரின்பம், அமைதியைக் கொண்டு வர வழிபாடு நடத்துகின்றனர். பொருட்களின் செழிப்பை அனுபவிக்கின்றனர்.
ஆனால், திருப்தியும், மகிழ்ச்சியும் மட்டும் வரவில்லை. கொரோனா காலத்திற்கு பிறகு இந்தச் சிந்தனை பரவலாக இருக்கிறது. மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற பாரதம் வழிகாட்டும் என இன்று உலகம் நம்புகிறது. பாரதத்தில் அதற்கான பாரம்பரியம் உள்ளது. இதனை முன்னரே பாரதம் செய்து காட்டியுள்ளது. இந்த நோக்கத்திற்காக தான் நமது சமூகமும், நாடும் உருவானது.
சில மாதங்களுக்கு முன்பு, உலக முஸ்லிம் கவுன்சில் அமைப்பின் பொதுச்செயலாளர், பாரதம் வந்தபோது, உலகில் நல்லிணக்கம் நிலவுவதற்கு பாரதம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார். அதுவே நமது கடமை. இதற்காக தான் ஹிந்து மதம் உருவானது. உலகத்திற்கு பாரதம் வழி காட்டும். இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.