திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ரத்தினம் வீட்டில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விடியாத திமுக அரசு ஆட்சி அமைத்த பின்னர் மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு வரவேண்டிய வருவாய் அனைத்தும் திமுகவை சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக சென்றுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் நேரடியாக ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதே போன்று மணல் குவாரி முறைகேடு தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த அக்டோபர் 12ம் தேதி 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ரத்தினம் வீட்டில் 31 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது ரத்தினம் வீட்டில் அவருடைய மூத்த மகன் துரைராஜ் மற்றும் அவருடைய மனைவி, இளைய மகன் வெங்கடேஷ், தாயார் ஆகியோர் இருந்தனர்.
இதனிடையே வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் 2 நகை எடை இயந்திரத்துடன் வீட்டிற்குள் சென்று வீட்டிலிருந்த நகைகளை எடை போட்டு மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து 31 மணி நேரம் அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 25) காலை திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டு வாசலில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்னும் பல்வேறு ஆவணங்கள் சிக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் பின்னர் மணல் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.